அனாமதேய பேர்வழிகள் நாடும் தளத்தில் செஃபோரா வாடிக்கையாளர் விவரங்கள்

அனாமதேய பேர்வழிகள் நாடும் தளத்தில் செஃபோரா வாடிக்கையாளர் விவரங்கள்

2 mins read
0e55950f-75cf-4f3a-8620-84a7d69360d9
சிங்கப்பூரையும் மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். படம்: ஷின் மின் டெய்லி -

செஃபோரா என்ற அனைத்துலக ஒப்பனை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான 3 மில்லியனுக்கும் மேற்பட்ட விவரங்கள் 'டார்க் வெப்' என்ற தளத்தில் காணப்படுவதாக முன்னணி இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது.

அந்தத் தகவல்களில் சில இந்த ஆண்டு தொடக்கத்தில் திருடப்பட்டு இருக்கலாம் என்று 'குரூப்-ஐபி' என்ற சிங்கப்பூரை தளமாகக் கொண்ட அந்தப் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

'டார்க் வெப்' தளங்களில் செஃபோராவைச் சேர்ந்த இரண்டு தகவல் பக்கங்கள் பற்றி விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்தப் பக்கங்களில் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களைச் சேர்ந்த தகவல்கள் அடங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

'டார்க் வெப்' என்பது இணையத்தின் ஓங் அங்கமாகும். அந்தத் தளத்திற்குச் சிறப்பு மென்பொருள் மூலமாகத்தான் போக முடியும்.

தங்களை யாரும் தொடர்புகொள்ள முடியாதபடி ரகசியமாக, மர்மமான நிலையில் இருந்துவர விரும்பும் இணையப் புழங்கிகள், வலைத்தள நிர்வாகிகள் டார்க் வெப் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

திருட்டு தகவல்களைக் கொள்முதல் செய்வது, இணையத்தில் ஊடுருவதற்கான சாதனங்கள், போதைப்பொருள் தகவல்கள் போன்ற சட்டவிரோத பரிவர்த்தனைகள் அந்தத் தளத்தில் நடப்பதுண்டு.

செஃபோரா நிறுவனம், தன்இணைய வாடிக்கையாளர்களின் தகவல்கள் அத்துமீறப்பட்டு இருக்கின்றன என்று சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதன் தொடர்பில் புலன்விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்தத் தகவல்களில் சில விற்பனைக்காகக் கொடுக்கப்படுவது தெரியவந்துள்ளதாக குரூப்-ஐபி நிறுவனம் தெரிவித்து உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.