செந்தோசா கோவ்வில் உள்ள One°15க்கு வரும் கலன்களுக்கு மரினாவில் அமைக்கப்பட்டுள்ள 'சிஐகியூ' எனப்படும் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தப்படும் நிலையத்திலேயே அனுமதி வழங்கும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், உள்துறை அமைச்சு, கடலோரக் காவல் படை ஆகியவற்றின் ஆதரவுடன் இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரே குடிநுழைவு ஆணையத்தின் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 'சிஐகியூ' நிலையம் ஜூன் மாதம் 15ஆம் தேதி சேவையைத் தொடங்கியது. இதுவரை சுமார் 50 படகுகளில் பரிசோதனைகளை அது மேற்கொண்டு அனுமதி அளித்துள்ளது.
உள்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் நேற்று 'சிஐகியூ' நிலையத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
படகுகளில் பயணம் செய்வோருக்கு ஈர்ப்புமிக்க தெரிவாக One°15ஐ உருவாக்க இந்தப் புதிய வசதி உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு செந்தோசா கோவ்வில் உள்ள One°15க்கு வரும் கலன்கள் 'சிஸ்டர்ஸ்' தீவில் இருக்கும் குடிநுழைவு சோதனைச் சாவடி நிலையத்தில் அனுமதி பெறவேண்டி இருந்தது.
'சிஸ்டர்ஸ்' தீவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்தப் புதிய 'சிஐகியூ' நிலையம் உதவுவதாகக் கூறப்பட்டது.
எதிர்காலத்தில் ஜோகூர் பாருவில் உள்ள புத்ரி துறைமுகம், இந்தோனீசியாவில் உள்ள நிரூப் தீவு ஆகியவற்றில் உருவாக்கப்பட உள்ள நிலையங்களுக்கும் செந்தோசா கோவ்வுக்கும் இடையிலான படகுப் போக்குவரத்துக்கும் இந்தப் புதிய நிலையம் சேவை வழங்கும் என்று கூறப்படுகிறது.

