'சட்டப் பள்ளிகளில் வலுவான சமரசப் பாடத்திட்டம் வேண்டும்'

'சட்டப் பள்ளிகளில் வலுவான சமரசப் பாடத்திட்டம் வேண்டும்'

2 mins read

சிங்கப்பூரில் உள்ள சட்டப் பள்ளிகளில் வலுவான சமரச பாடத்திட்டம் தேவை எனவும் உலக அளவில் உள்ள சட்டப் பள்ளிகளிலும் அந்தப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நேற்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இம்மாதம் 7ஆம் தேதி சிங்கப்பூர் சமரச மாநாட்டு ஒப்பந்தம் கையொப்பமாகவுள்ளது. அதனையடுத்து அந்தத் துறை மீதான ஆர்வம் வளரும் என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அனைத்துலக சமரசப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 30 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 140 மாணவர்கள், 28 பயிற்றுவிப்பாளர்கள் மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர்.

அனைத்துலக அளவில் சமரச சட்டப் பிரிவில் நடத்தப்படும் முதல் போட்டி இது. இதனை ஏற்பாடு செய்த சிங்கப்பூர் அனைத்துலக சமரசக் கழகம், ஒரு வாரத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

"சமரசம் எவ்வளவு முக்கியமாக இருந்து வந்துள்ளது, உலக அளவில் சமரசத்தின் மீதான ஆர்வம் போன்றவற்றுக்கு இது சான்று," என்றார் அவர்.

சிங்கப்பூரில் உள்ள சட்டப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சமரசம் ஏற்கெனவே ஒரு பிரிவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகத் துறை நிபுணர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துவதை ஆதரிக்கும் பூசல் தீர்வு சூழல் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் அனைத்துலக சமரசக் கழகம், வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றின் பணிகள் இதில் அடங்கும்.

சமரசத்தின் உண்மையான மதிப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அதே வேளையில் சம்பந்தப்பட்ட தரப்புகளின்

நல்லுறவு கட்டிக்காக்கப்படுவதி லும் அவற்றுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்வதிலும்தான் உள்ளது என்று திரு டோங் குறிப்பிட்டார்.