ஆய்வு: ஸ்டராய்டு ஊசி போட கூடுதல் கட்டணம் வசூலிப்பு

ஆய்வு: ஸ்டராய்டு ஊசி போட கூடுதல் கட்டணம் வசூலிப்பு

2 mins read

'ஸ்டராய்டு' எனப்படும் ஊக்க மருந்து ஊசிகளை நோயாளிகளுக்குச் செலுத்துவதை சில மருத்துவர்கள் நிறுத்திவிட்ட நிலையில், அத்தகைய ஊசிகளுக்கு வேறு சில மருத்துவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இணைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட 6,000 உறுப்பினர்களைக் கொண்ட சிங்கப்பூர் மருத்துவச் சங்கம், 2,400க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 'காலேஜ் ஆஃப் ஃபேமிலி ஃபிசிசியன்ஸ்' எனப்படும் குடும்ப மருத்துவர்கள் கல்லூரி ஆகிய அமைப்புகள் இணைந்து இணையம் வழியாகக் கருத்தாய்வு ஒன்றை நடத்தின. 'ஸ்டராய்டு' மருந்து ஒன்றின் மிக அரிதான பக்கவிளைவு பற்றி நோயாளியிடம் கூறாததற்காக கடந்த ஜனவரி மாதத்தில் எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் லிம் லியன் அர்னுக்கு $100,000 அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டராய்டு மருந்தை ஊசி மூலம் நோயாளிகளுக்கு வழங்கும் போக்கு, மருத்துவர் லிம்முக்கு எதிரான இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க இந்த ஆய்வை அந்த அமைப்புகள் நடத்தின. மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கின் தொடர்பில் கடந்த மாதம் தீர்ப்பளித்ததற்கு முன்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மருத்துவர் லிம் தமது நோயாளிக்கு ஊசி மூலம் செலுத்திய மருந்தின் பக்கவிளைவாக தோலில் நிறமாற்றம் ஏற்பட்டதுடன் கொழுப்பு, தசைத்திசு ஆகியவற்றில் இழப்பும் ஏற்பட்டதாக அவருக்கு எதிராக சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தில் புகார் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் நடுவர் தீர்ப்பாயம் கடுமையான அபராதத்தை மருத்துவர் லிம்முக்கு விதித்ததற்கு மருத்துவ நிபுணர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. மருத்துவர் லிம்முக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு 4,000 மருத்துவர்கள் கையொப்பமிட்ட மனு சுகாதார அமைச்சிடம் அளிக்கப்பட்டது.

திரு லிம்முக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, நோயாளிகளுக்கு அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சிகிச்சையை வழங்குவதன் தொடர்பில் மருத்துவர்களின் போக்கில் மாற்றம் காணப்பட்டது. சில மருத்துவர்கள் அத்தகைய சேவையை நோயாளிகளுக்கு வழங்குவதைத் தவிர்த்தனர்.

பொதுத்துறை, தனியார் துறை மருத்துவர்கள் 2,000 பேர் இந்தக் கருத்தாய்வில் பங்கேற்றனர்.

அவர்களில் 164 பேர் அத்தகைய சிகிச்சை வழங்குவதை நிறுத்திக்கொண்டனர். முன்பு அத்தகைய சிகிச்சைக்கு $100 அல்லது அதற்கும் குறைவான கட்டணம் வசூலித்த 588 மருத்துவர்களில் 206 பேர் மட்டுமே திரு லிம்முக்கு எதிரான தீர்ப்புக்குப் பிறகு அதே கட்டணம் வசூலித்தனர். அத்தகைய சிகிச்சைக்கு முன்பு 7 மருத்துவர்கள் மட்டுமே $3,000 வசூலித்தனர். ஆனால், ஆய்வில் அத்தகைய மருத்துவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்தது.

கருத்தாய்வுக்குப் பிறகு, மருத்துவர் லிம்முக்கு விதிக்கப்பட்ட அபராதத்தால் நன்மைகள் இல்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டது.

கடந்த மாதம் 24ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், "சிகிச்சையால் ஏற்படக்கூடிய அனைத்து அபாயங்களையும் தெரிவிப்பது மருத்துவரின் பணியாகாது," என்றார். "தவறாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு இது," என்று கூறிய அவர், "குற்றத்தை ஒப்புக்கொள்வது விவேகமற்ற முடிவு, ஆதாரமற்ற தண்டனை," என்றார்.