எஸ்எம்ஆர்டி பேருந்துகளின் தடக் கட்டுப்பாட்டாளர்கள், கட்டணப் பரிசோதகர்கள் என சுமார் 60 பேர் கேமராக்களை உடலில் அணிந்து வலம் வருகின்றனர். அதன் மீது, 'பதிவாகிக்கொண்டிருக்கிறது' என்பதைக் குறிப்பிடும் ஆங்கில வாசகம் தென்படுகிறது.
பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவது, புகார் செய்யப்பட்ட சம்பவங்களைச் சரிபார்ப்பது, அவசர காலங்களில் பதில் நடவடிக்கைகளை விரிவு
படுத்துவது போன்றவற்றுக்கு தொழில்நுட்பம் உதவுகிறது என்றார் எஸ்எம்ஆர்டி தலைமைத் தொடர்பு அதிகாரி திருவாட்டி மார்கரட் டியோ.
எதற்காக பயணிகளின் செயல்பாடுகள் பதிவுசெய்யப்படுகின்றன என்பது தெரியாத சூழலில், அத்தகைய கேமராவை அணிந்திருந்த தடக் கட்டுப்பாட்டாளரைக் கண்டு, வியப்புற்றதாகக் கூறிய 38 வயதான நாராயணன் ஆனந்த் சந்திரசேகர், தாம் அசௌகரியமாக உணர்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
கட்டண மோசடிகள் அதிகரித்திருந்தால் அதனைக் கையாள இந்த கேமரா பதிவுகள் பயன்படுத்தப்படுமா என்பது 29 வயதான சாமுவெல் டானின் கேள்வியாக இருந்தது.
பேருந்துகளில் செய்யப்படும் இந்தப் பதிவுகளை, தேவைப்படும் சமயத்தில் அனுமதி பெற்ற ஊழியர்கள் பார்வையிடுவர் என்று கூறிய திருவாட்டி டியோ, அந்தப் பதிவுகள் எஸ்எம்ஆர்டி பேருந்து நடைமுறைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றார். தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தகவல் நிர்வகிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
ஆயினும் தடக் கட்டுப்பாட் டாளர்கள் பயணிகளில் நடவடிக்கைகளைப் பதிவு செய்வது, பயணிகளிடையே கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
ஆனால், இணையக் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அதன் பயனாளர்களின் தகவல்களைத் திரட்டுவது பயனாளர்களின் விருப்பத்துக்குரியதாக இருக்காது என்று என்று 27 வயதான வாங் வெய் ஷுவான் கூறினார்.
பேருந்துகளில் சேகரிக்கப்படும் இந்த கேமரா பதிவுகள் பொது இடங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் போன்றவைதான் எனவும் அதனை முன்னிட்டு பயணிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும் சட்டத்துறை, கல்வித்துறை நிபுணர்கள் கருத்துரைத்து உள்ளனர்.

