வேலை செய்யும் தாய்மார்களுக்கு என்டியுசியின் ஆதரவு பற்றுச் சீட்டு

வேலை செய்யும் தாய்மார்களுக்கு என்டியுசியின் ஆதரவு பற்றுச் சீட்டு

2 mins read

தேசிய தொழிற்சங்க காங்கிரசில் உறுப்பினராக உள்ள வேலை செய்யும் தாய்மார்களுக்கு ஆதரவு பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று என்டியுசி நேற்று அறி வித்தது.

சுமார் 12,000 தாய்மார்களுக்கு தலா ஒன்பது வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டு வழங்கப்படும் என்றும் 'கிராப் ரைட்' அல்லது 'கிராப் ஃபுட்' ஆகியவற்றுக்கு அந்தப் பற்றுச் சீட்டை பயன்படுத்தலாம் என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் என்டியுசி குறிப்பிட்டது.

'என்டியுசி யு ஃபேமிலி' பிரிவு தொடங்கிய வேலை செய்யும் மாதர்களின் தோழர்கள் என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

ஏழு அல்லது அதற்கும் குறைவான வயதுடைய இளம் பிள்ளைகளின் தாய்மார்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதி பெறுகின்றனர்.

www.ufamiliy.org.sg/FOWM என்ற இணையப் பக்கத்தின் வழியாக அல்லது சங்கத்தின் மூலமாக பற்றுச் சீட்டுகளைப் பெறலாம்.

இவ்வாண்டு இறுதி வரை பற்றுச் சீட்டு விநியோகிக்கப்படும்.

முதலாளிகளும் சங்கங்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்காக கழிவுடன் கூடிய பற்றுச் சீட்டு களையும் வாங்கலாம்.

$69 மதிப்புள்ள பயணங்கள், உணவுகளுக்கான பற்றுச்சீட்டு ஐம்பது வெள்ளிக்கும் $138 மதிப்புள்ள பற்றுச் சீட்டு நூறு வெள்ளிக்கும் வாங்க முடியும் என்று என்டியுசி கூறியது.

மேலும் பல சலுகைகளை 'யு ஃபேமிலி' விரைவில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே என்டியுசி மாதர், குடும்பப் பிரிவின் இடைக்கால இயக்குநர் கோ யான் பிங், நேர மின்மை காரணமாக சிரமத்தை எதிர்நோக்கும் வேலை செய்யும் தாய்மார்களுக்குப் பற்றுச் சீட்டு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.