மக்களுக்காக தமது கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக்.
ஆனால், அதற்கு முதலில் அக்கட்சி நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் செயல் கட்சி அனுபவித்து வரும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.
பொதுமக்களுக்குத் தமது கட்சியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் நேற்று பேசிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் நிறுவனருமான டாக்டர் டான், சிங்கப்பூரர்களின் இதயத்துக்கு மிக அருகில் உள்ள விவகாரங்களைப் பட்டியலிட்டார்.
மத்திய சேமநிதிக் கழகக் கொள்கைகள், சுகாதாரப் பாராமரிப்புச் செலவுகள், வருமான ஏற்றத்தாழ்வு, வாழ்க்கைச் செலவினம் ஆகியவைதான் அந்த விவகாரங்கள் என்று கூறிய டாக்டர் டான், அதற்கான தரவுகள் கிடைத்தால் இந்த விவகாரங்கள் பற்றி விரிவாக ஆராய தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
"எங்களுக்கு அவற்றுக்கான தரவுகள் கிடைக்க வேண்டும். அது நடைபெற வேண்டுமென்றால், நாங்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
"நல்ல தகவல்கள் இல்லாமல் நாங்கள் பேசுவது சரியல்ல. தகவலுடன் பேசினால் மக்கள் நம்மை மதிப்பார்கள். நாங்கள் செய்வதைப் பொறுப்புடன் நிறைவேற்றுவதை அவர்கள் பார்த்து நம்பிக்கை வைப்பார்கள்," என்றும் டாக்டர் டான் சொன்னார்.
சுவிஸோட்டல் மெர்சண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற கட்சி தொடக்க விழாவில் டாக்டர் டானும் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஆறு உறுப்பி னர்களும் கட்சி வலியுறுத்த விரும்பும் அம்சங்கள் பற்றிப் பேசி னார்கள்.
வாக்களிக்கும் வயதை 18க்கு குறைத்தல், சிங்கப்பூருக்கும் இந்தி யாவுக்கும் இடையிலான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன் பாட்டை மறுஆய்வு செய்தல், சிங்கப்பூரின் குறைவான குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்துதல் போன்றவை பற்றி சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினர்கள் பேசினார்கள்.

