இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட இருக்கும் பாடாங்கும் அதன் அருகில் உள்ள மூன்று பாலங்களும் தேசிய நினைவுச் சின்னங்களாக அரசிதழில் பதிவு செய்யப்பட உள்ளன. நினைவுச் சின்னப் பட்டியலில் இடம்பெறும் முதல் பசுமையான, பொதுவெளியாக பாடாங் அமையும்.
அதேபோல தேசிய மரபுடை மைக் கழகத்தின் 'பிஎஸ்எம்' எனப்படும் தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பேணிக் காக்கும் பிரிவு அதன் பட்டியலில் பாலங்களைச் சேர்த்திருப்பது இதுவே முதல்முறை. சிங்கப்பூர் ஆற்றில் அமைந்துள்ள கெவனா, ஆண்டர்சன், எல்ஜின் ஆகிய பாலங்கள் அவை. பாடாங், பாலங்கள் என்னும் இரு புதிய அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள தேசிய நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை 74ஆக உயரும்.
சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவு தொடர்பான நினைவுகளை ஏற்படுத்திவரும் அதிகாரிகளின் முயற்சிகளுள் ஒன்றாக இந்தப் புதிய நினைவுச் சின்னங்கள் இடம்பெறுகின்றன. இதற்கான அறிவிப்பை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று வெளியிட்டார்.
பாடங்கிற்கு பழம்பெறும் வரலாறு உண்டு. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகப் பிரிவை இங்கு உருவாக்குவதற்கான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக 1819ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பிரிட்டன் அதிகாரிகளுக்கும் ஜோகூர் சுல்தானுக்கும் இடையிலான பல கட்டங்களாக பேச்சுவார்த்தை பாடங்கில் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன.
மேலும், 1800ஆம் ஆண்டுகளில் இருந்து பொதுமக்கள் ஒன்றுகூடும் இடமாக பாடாங் இருந்து வந்திருப்பதாக தேசிய மரபுடைமைக் கழகத்தின் பிஎஸ்எம் பிரிவு இயக்குநர் திருவாட்டி ஜீன் வீ தெரிவித்துள்ளார்.
காலனித்துவ காலத்தின்போது சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், அரச பரம்பரையின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், ஆண்டுவிழாக்கள், முடிசூட்டு விழாக்கள் போன்றவற்றுடன் சில சமயங்களில் தைப்பூச விழாவும் பாடாங்கின் பசுமை நிறைந்த வெளியில் கொண்டாடப்பட்ட வரலாறும் உண்டு.
தேசிய நினைவுச் சின்னம் என்பது கட்டட அமைப்பின் முக்கியத்துவத்திற்கு அளிக்கப்படும் உயரிய அங்கீகாரம் ஆகும். சிங்கப்பூரில் கட்டி எழுப்பப்பட்ட மரபுடைமைக்குப் பங்களிக்கும் சமூக முக்கியத்துவம், கட்டடக்கலை, வரலாறு போன்றவை நினைவுச் சின்னங்களுக்கான மதிப்பீடுகளாகக் கணக்கிடப்படுகின்றன.
தேசிய நினைவுச் சின்னம் என்று அறிவிக்கப்படுவதால் பாடாங் திடல் மற்றும் ஆறுகளின் பயன்பாட்டில் எவ்வித மாறுதலும் ஏற்படாது என்று தேசிய மரபுடைமைக் கழகம் கூறியுள்ளது.

