சரியான பாதை தெரியாமல் தவிக்கும் டான் செங் போக்: கோ சோக் டோங் விமர்சனம்

சரியான பாதை தெரியாமல் தவிக்கும் டான் செங் போக்: கோ சோக் டோங் விமர்சனம்

2 mins read

தமது நீண்டகால நண்பர் டான் செங் போக், சரியான பாதை தெரியாமல் தவிப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்.

தமது சக கட்சிக்காரராக இருந்து தற்போது அரசியல் எதிரி யாகி இருக்கும் டாக்டர் டான் செங் போக்கை திரு கோ கடுமையாக விமர்சித்தார்.

டாக்டர் டான் தமது புதிய கட்சியான முன்னேறு சிங்கப்பூர் கட்சியை நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக துவக்கி வைத்தார்.

"ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் நான் பயின்றபோது டான் செங் போக் என் வகுப்பில் படித்த சக மாணவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு அவரை நன்றாக தெரியும். சரியான பாதை எது என்று தெரியாமல் அவர் தவிப்பது எனக்கு வேதனையைத் தருகிறது," என்றார் திரு கோ.

தங்களை எதிரிகளாக டாக்டர் டான் தேவையில்லாமல் கற்பனை செய்து தாக்குவதாக திரு கோ கூறினார்.

கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய திரு டான், மக்கள் செயல் கட்சியில் வெளிப்படைத்தன்மை குறைந்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

நாட்டின், மக்களின் நலனுக்காக அரசியலுக்குத் திரும்பியிருப்பதாக நேற்று முன்தினம் தமது புதிய கட்சியைத் துவக்கி வைத்தபோது முன்னாள் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் டான் கூறினார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ தம்மை மக்கள் செயல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தது பற்றி அவர் கட்சியின் துவக்க விழாவில் நினைவுகூர்ந்தார்.

தற்போது தம்முடன் இணைந்து செயல்படும்படி தாம் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொள்வதாக டாக்டர் டான் கூறினார்.

இதுகுறித்து திரு கோ கருத்து தெரிவித்தார். டாக்டர் டானை மக்கள் செயல் கட்சிக்கு அழைக்கும்படி திரு லீ குவான் இயூவிடம் தாம் பரிந்துரை செய்ததாக திரு கோ கூறினார்.

26 ஆண்டுகளாக ஆயர் ராஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் டான் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டி யிடத் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும்.

2011ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டாக்டர் டான் போட்டியிட்டு முன்னாள் துணைப் பிரதமர் டோனி டான் கெங் யாமிடம் நூலிழையில் தோல்வியைத் தழுவினார்.

சிங்கப்பூரின் குறைந்தபட்ச வாக்காளர் வயதை 18க்குக் குறைக்க, சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது, சிங்கப்பூரின் குறைவான பிறப்பு விகிதத்தை உயர்த்துவது போன்றவை தமது கட்சியின் இலக்குகள் என்று டாக்டர் டான் தெரிவித்துள்ளார்.

முன்னேறு சிங்கப்பூர் கட்சிக்கு வாக்களித்து மக்கள் செயல் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவதைத் தடுக்க சிங்கப்பூரர்களை டாக்டர் டான் கேட்டுக்கொண்டார்.