போதைப்பொருள் தொடர்பான குற்றம் புரிந்ததாக 21 வயது மலேசிய ஆடவர் கடந்த வியாழக்கிழமையன்று ஷென்டன் வேக்கும் கெம்ஸ்வெல் சாலைக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் கைது செய்யப்பட்டார்.
ஆர்ச்சர்ட் டவர்ஸ் வாகன நிறுத்துமிடத்தில் 336 கிராம் ஐஸ் வகை போதைப்பொருள் கொண்ட பிளாஸ்டிக் பையை அவர் வீசியதாகக் கூறப்படுகிறது.
போதைப்பொருள் கொண்ட பிளாஸ்டிக் பையை வீசியதும் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து அவர் அவசரமாக வெளியேறியதை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டனர்.
அந்த ஆடவர் வீசிய பிளாஸ்டிக் பையை அதிகாரிகள் எடுத்துப் பார்த்தபோது அதில் $33,000 பெறுமானமுள்ள போதைப்பொருள் இருந்தது.
பையில் இருந்த போதைப்பொருள் ஒரு வாரத்துக்கு 192 போதைப்பித்தர்கள் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இருந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், ஆர்ச்சர்ட் டவர்ஸ், இன்டர்நேஷனல் பில்டிங் ஆகிய இடங்களில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 30 வயது சிங்கப்பூர் ஆடவரும் ஒருவர்.
கைது செய்யப்பட்ட சிங்கப்பூர், மலேசிய சந்தேக நபர்களிடமிருந்து மொத்தம் $13,390 பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தீவெங்கும் நடத்திய அதிரடிச் சோதனையின் விளைவாக இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிரடிச் சோதனைகள் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை வரை நடத்தப்பட்டது.
அதிரடிச் சோதனையின்போது போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 192 பேர் கைது செய்யப்பட்டனர். பிடோக், புக்கிட் மேரா, சுவா சூ காங், ஹவ்காங், செம்பவாங், தெம்பனிஸ், தெலுக் பிளாங்கா, ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அதிரடிச் சோதனையின்போது $65,000க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

