ஐஎஸ் போராளியின் சிங்கப்பூர் மனைவி இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது

ஐஎஸ் போராளியின் சிங்கப்பூர் மனைவி இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது

2 mins read

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைய போஸ்னியாவில் பிறந்த தமது கணவருடன் சிரியாவுக்கு பயணம் செய்த சிங்கப்பூர் பெண் மாண்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர்களது மூன்று பிள்ளைகள் ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

சிரியாவில் நடைபெற்ற போரில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு சிங்கப்பூரர்களில் மெல்பர்னில் வசித்து வந்த ஃபௌசியா பேகம் கமால் பாச்சாவும் ஒருவர். அவரது கணவர் யாசின் ரிஸ்விக்கும் அவர்களது மூத்த மகனும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

உயிருடன் இருக்கும் அவர்களது இரண்டு மகள்களும் ஒரு மகனும் 6லிருந்து 12 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் மூவரும் ஆஸ்திரேலியர்கள்.

சிரியாவில் நடைபெற்ற போரில் ஃபௌசியாவின் ஈடுபாடு குறித்து உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கடந்த வாரம் தெரிவித்தார்.

ஃபௌசியாவைப் பற்றி வேறு எந்த ஒரு விவரமும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஃபௌசியாவும் அவரது குடும்பமும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த மற்றோர் ஐஎஸ் பயங்கரவாதியான மெகாட் ஷாடான் அப்துல் சமாட்டும் சிரியாவில் மாண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதை அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆள்சேர்க்கும் காணொளிகளில் தோன்றிய ஷாடான் சிங்கப்பூரில் தாக்குதல்களை நடத்த தமது நண்பர்களை ஊக்குவித்ததாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

"யாரெனும் ஒருவர் லாரி ஓட்டிச் சென்று தைப்பூசத் திருநாளின்போது கூடியிருக்கும் பக்தர்கள் மீது மோத வேண்டும் என்று அவர் விரும்பினார்.

"அவரது இந்த விருப்பத்தை யாரும் நிறைவேற்றாதபடி உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பார்த்துக்கொண்டது," என்று திரு சண்முகம் தெரிவித்தார்.