கேரளாவின் கொச்சின் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த விமானத்தின் பெண் பணியாளரைத் தகாத முறையில் தீண்டிய 39 வயது ஆடவரைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விஜயன் மதன் கோபால் என்ற அந்த ஆடவர், அந்தப் பெண்ணை மூன்று முறை மானபங்கம் செய்ததாக நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
2017ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கும் காலை 8.14 மணிக்கும் இடையே சிங்கப்பூர் நிரந்தவாசியான விஜயன் இந்தக் குற்றங்களைப் புரிந்தார்.
விமானத்திற்குள் உணவையும் மதுபானத்தையும் வாங்கியபின் குடிபோதையில் இருந்த விஜயன் பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து அவருக்கும் மற்றொரு விமான பணியாளருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பதற்றத்தைக் குறைக்க எண்ணி பெண் பணியாளர் இடையிலேயே வந்து விஜயன் கட்டணம் கொடுப்பதற்கு முன்பே அவருக்கு உணவு கொடுக்க தாம் ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தார். இருந்தபோதும் விஜயன் அமைதியாகவில்லை. தன்னை கவனிக்க அந்தப் பெண் பணியாளரிடம் மட்டும் வரவேண்டும் என்றும் வேறு யாரும் வரக்கூடாது என்றும் விஜயன் பிடிவாதமாகக் கூறினார்.
மருத்துவ உதவி தேவைப்பட்டிருந்த மற்றொரு பயணிக்கு உதவி செய்துகொண்டிருந்த பெண் பணியாளரை இடையிடையே கூப்பிட்டு தொல்லைப்படுத்தியதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். தம்மைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவர் விஜயனிடம் தெரிவித்தபோது, விஜயன் அவரைத் தகாத முறையில் தீண்டினார்.
பாதிக்கப்பட்ட பெண் பணியாளர் பிறகு இது குறித்து விமான போலிசாரிடம் புகார் செய்தார்.
நீதிமன்ற விசாரணையின்போது தான் அந்தப் பெண்ணை மானபங்கம் செய்யவில்லை என்று விஜயன் பொய்யுரைத்தார். பணியாளர்களின் சேவைத்தரம் மோசமாக இருந்தது குறித்த தனது புகாரை இருட்டடிப்பு செய்வதற்காக அந்தப் பெண் பணியாளர் நாடகமாடுவதாக விஜயன் கூறினார்.
தற்போது 5,000 வெள்ளி பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டுள்ள விஜயனுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும். மானபங்கம் தொடர்பான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்காகவும் அவருக்கு ஈராண்டு சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம்.

