உள்ளூர் மாணவர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் ஓங்

உள்ளூர் மாணவர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் ஓங்

2 mins read

வெளிநாட்டு மாணவர்கள் காரணமாக உள்ளூர் மாணவர்களுக்கு உயர்கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காத நிலை ஏற்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் உறுதி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் மாணவர்களை மனதில் கொண்டே உயர்கல்வி நிலையங்களில் உள்ள இடங்கள் திட்டமிடப்படுவதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்தந்த உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில தேவையான மதிப்பெண்களைப் பெறும் அனைத்து சிங்கப்பூர் மாணவர்களுக்கும் அங்கு பயில இடம் கிடைப்பதாக திரு ஓங் கூறினார். அதன் பிறகு உயர்கல்வி நிலையங்களில் நுழைய தேவையான மதிப்பெண்கள் சற்று உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் தகுதி பெறும் சிறிதளவு வெளிநாட்டு மாணவர்களுக்கு இடம் வழங்கப்படுவதாக திரு ஓங் கூறினார்.

வெளிநாட்டு மாணவர்களுக்காக அரசாங்கம் செலவு செய்வது குறித்து பாட்டாளிக் கட்சியின் லியோன் பெரேரா கேட்ட கேள்விக்கு திரு ஓங் இந்தப் பதிலை அளித்தார்.

கல்விக்காக ஒதுக்கப்படும் வருடாந்திர தொகையான ஏறத்தாழ $13 பில்லியனில் மாபெரும் பகுதி மானியங்கள், நிதி உதவி போன்றவற்றால் உள்ளூர் மாணவர்களுக்காக செலவழிக்கப்படுவதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

கல்விக்கான கட்டணத்தை ஏற்புடையதாக்க இவ்வாறு செய்யப்படுவதாக அவர் கூறினார்.

நிதி உதவி, உதவித் தொகைகள் ஆகியவை சிங்கப்பூரர்களுக்கு மட்டும் என்றார் அவர்.

வெளிநாட்டு மாணவர்களுக்கான உபகாரச்சம்பளம், கல்வி நிதி உதவி தொடர்பாக அரசாங்கம் ஆண்டுதோறும் செலவு செய்யும் தொகை கடந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கான உபகாரச்சம்பளங்களுக்காக ஓராண்டுக்கு ஏறத்தாழ $130 மில்லியன் செலவாகியது.

இது கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு விழுக்காடாகும்.

வெளிநாட்டு மாணவர்களுக்காக செலவு செய்யப்படும் கல்வி நிதி உதவி $108 மில்லியன். ஆனால் இவையெல்லாம் தோராயமாகக் கணக்கிடப்பட்ட தொகை என்றார் அமைச்சர் ஓங்.

வெளிநாட்டு மாணவர்கள் இல்லாவிட்டாலும் கட்டடங்கள், ஆராய்ச்சிக்கூடங்கள், கருவிகள், நிர்வாகம், மனிதவளம் ஆகியவற்றுக்குச் செலவு செய்தாக வேண்டும் என்பதை திரு ஓங் சுட்டினார்.

சிங்கப்பூரில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும் திரு ஓங் மேற்கோள் காட்டினார்.

"நமது அனைத்துலக மாணவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பிவிட்டால் மற்ற நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ளும், தங்கள் நட்புக் கட்டமைப்பை விரிவுப்படுத்தும் வாய்ப்புகளை சிங்கப்பூர் மாணவர்கள் இழப்பர்.

"நாம் உலகமயாமாகியுள்ள, பல கலாசாரங்கள் கொண்ட உலகில் பணியாற்றி வருவதால் கல்வித்துறையில் இந்த அம்சம் மிகவும் முக்கியமானது," என்றார் அமைச்சர் ஓங்.

அனைத்துலக மாணவர்களில் ஏறத்தாழ நான்கு விழுக்காட்டினர் கல்வி ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றாமல் சென்றுவிடுவதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

அனைத்துலக மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட $5.5 மில்லியன் பெறுமானமுள்ள கல்வி மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தகுந்த மீட்பு முயற்சிகளைத் தமது அமைச்சு தொடர்ந்து எடுக்கும் என்று திரு ஓங் தெரிவித்தார்.

கல்வி ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றாமல் சென்றுவிடும் செயலைக் கடுமையான விதிமீறலாகக் கருதுவதாக திரு ஓங் கூறினார்.