பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத 'பிஎம்டி': ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தடை

பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத 'பிஎம்டி': ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தடை

3 mins read
f83117f9-591a-436a-8b01-988596f79971
தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

UL2272 பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பொதுப் பாதைகளில் பயன்படுத்த விதிக்கப்படும் தடை ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே நடப்புக்குக் கொண்டுவரப்படும். அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் பொதுமக்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் சாத்தியம் இருப்பது குறித்து பலர் கவலை தெரிவித்திருப்தால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று தெரிவித்தார்.

அண்மைய காலமாக தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பாகப் பல தீச்சம்பவங்கள் நிகழ்ந்ததால் பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதற்கான காலக்கெடுவை முன்னதாகக் கொண்டுவரும் அவசியம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் லாம் கூறினார்.

2018ஆம் ஆண்டில் தனிநபர் நடமாட்டச் சாதனைகள் தொடர்பாக 52 தீச்சம்பவங்கள் பதிவாகின. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான 49 தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அனைத்து மின் ஸ்கூட்டர்களும் கட்டாயமாக சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று டாக்டர் லாம் அறிவித்தார்.

கடந்த மாதம் 18ஆம் தேதியன்று புக்கிட் பாத்தோக் அடுக்குமாடி வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டது. வீட்டின் உள்ளே கருகிய மூன்று மின் ஸ்கூட்டர்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட 40 வயது ஆடவர் மருத்துவமனையில் இறந்தார்.

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பாக ஏற்படும் தீச்சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து டாக்டர் லாம் கவலை தெரிவித்தார். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நிலப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

தற்போது ஏறத்தாழ 90,000 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பற்றியும் பொதுமக்களின் பாதுகாப்பு பற்றியும் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர். தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பாக ஏற்படும் தீச்சம்பவங்களை தடுப்பது, பாதசாரிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

"சிங்கப்பூரர்கள் பலர் தமது வாழ்வாதாரத்துக்காகவும் போக்குவரத்துக்காகவும் தனிநபர் நடமாட்டக் கருவிகளை நம்பி இருக்கின்றனர். எனவே காலகெடுவில் கொண்டுவரப்பட்ட மாற்றம் நியாயமானது," என்று நடமாட்டச் சாதனங்கள் UL2272 தரத்துக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யும் பாதுகாப்புச் சான்றதழ்களை முன்கூட்டியே பெற வைப்பது குறித்து டாக்டர் லாம் கூறினார்.

இதன்மூலம் UL2272 தரச் சான்றிதழ் கொண்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் விற்பனைக்குப் போதுமான அளவில் இருப்பதை வர்த்தகர்கள் உறுதி செய்ய போதுமான கால அவகாசம் தரப்படும் என்று டாக்டர் லாம் தெரிவித்தார்.

அண்மைய காலமாக தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பாதுகாப்புமிக்க பயன்பாட்டுக்கான தீர்வுகள் காணப்படும் வரை அக்கருவிகளை தற்காலிகமாகத் தடை செய்ய முடியுமா என்று நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி லீ பீ வா கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த டாக்டர் லாம், "தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான விபத்துகள் பற்றி படிக்கும்போதெல்லாம் அவற்றை தடை செய்வதன் மூலம் நிலைமை மேம்படுமா என்பது குறித்து என்னையே நான் கேள்வி கேட்டுக்கொண்டது உண்டு.

"ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதைகளிலிருந்து சைக்கிள்களை தடை செய்ய முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் என் நினைவுக்கு வந்தன. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய பிறகும் சைக்கிள்கள் நடைபாதைகளில் செல்வதை சிங்கப்பூரில் மேலும் அதிகமானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சைக்கிளைப் போலவே தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த சிங்கப்பூரர்களுக்குக் கற்பிக்கலாம் என நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்று டாக்டர் லாம் கூறினார்.