தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் டவர்சில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 76 பேர் கைது: அம்ரின் அமின்

2 mins read
7bccc015-79a7-4fa4-863d-3424956ed4d0
-

கடந்த ஆண்டு ஆர்ச்சர்ட் டவர்சிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் (படம்) பாலியல் தொழிலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆர்ச்சர்ட் டவர்சிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதிகாரிகள் அதிரடிச் சோதனைகள் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் மட்டும் அந்த வட்டாரத்தில் 18 அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டதாக திரு அம்ரின் அமின் கூறினார்.

அதிரடிச் சோதனையின்போது அந்தக் கட்டடத்தில் உரிமம் இல்லாத உடற்பிடிப்பு நிலையங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

அவை அனைத்தும் மூடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்ச்சர்ட் டவர்சில் நிகழும் குற்றங்கள், பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு மெல்வின் யோங்கும் ஹாலந்து- புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு கிறிஸ்டஃபர் டி சூசாவும் எழுப்பிய கேள்விகளுக்கு திரு அம்ரின் பதிலளித்தார்.

கடந்த மாதம் ஆர்ச்சர்ட் டவர்சில் ஒருவர் தாக்கப்பட்டதால் மாண்டார். கடந்த மாதம் 2ஆம் தேதியன்று 31 வயது திரு சதீஷ் நோவெல் கோபிதாஸைக் கொலை செய்ததாக ஏழு பேர் மீது முதலில் குற்றம் சுமத்தப்பட்டது.

அவர்களில் மூன்று பேர் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மாறாக, பொது இடத்தில் ஆயுதம் ஏந்திச் சென்றவருக்குத் துணையாகச் சென்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

ஆர்ச்சர்ட் டவர்சில் 30க்கும் மேற்பட்ட கேளிக்கை விடுதிகள் இருப்பதை திரு யோங் சுட்டினார். அங்குள்ள கேளிக்கை விடுதிகளின் அளவைக் கட்டுப்படுத்த அவர் பரிந்துரை செய்தார்.

விதிமுறைகளுக்கு உட்படாத கேளிக்கை விடுதிகளின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

கேளிக்கை விடுதிகளுக்கான உரிமங்களை வழங்குவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்து, நகர மறுசீரமைப்பு ஆயணையத்தின் திட்டம், சட்ட ரீதியாக அங்கு நிலவும் பிரச்சினைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கருத்தில் கொள்வர் என்று திரு அம்ரின் கூறினார்.

இதனால் ஆர்ச்சர்ட் டவர்சில் புதிய கேளிக்கை விடுதிகளை அமைக்க போலிசார் உரிமம் வழக்கும் சாத்தியம் மிகவும் குறைவு என்றார் அவர்.