இவ்வாண்டு டிசம்பரில் அரசாங்க ஆணை பெற்ற புதிய கழகம் ஒன்றை உள்துறை அமைச்சு அமைக்கவுள்ளது. அமைச்சின் பல்வேறு பிரிவுகளில் அறிவியல், தொழில்நுட்ப வளங்களை ஒரே கூரையின்கீழ் கொண்டு வருவது அதன் இலக்கு.
உள்துறை குழுவின் ஆற்றல்களை மேம்படுத்த இந்த ஏற்பாடு வகைசெய்யும். நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக உள்துறை குழு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு மசோதாவைத் தாம் தாக்கல் செய்தபோது உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று இதனைத் தெரிவித்தார்.
இந்தப் புதிய அமைப்பு 'எச்டிஎக்ஸ்' என்றும் அழைக்கப்படும். கண்காணிப்பு, தடயவியல், ரசாயனவியல், உயிரியல், கதிரியல், அணுவாயுதம், வெடிபொருள் மிரட்டல்கள், இயந்திரவியல், ஆளில்லா வானூர்திகள் போன்ற அம்சங்களில் இந்த அமைப்பு கவனம் செலுத்தும்.
"உள்துறை குழுவில் உள்ள 27,000 அதிகாரிகள், 54,000 தேசிய சேவையாளர்கள் மற்றும் தொண்டூழிய அதிகாரிகளுக்கு அப்பாற்பட்டு உள்துறை குழுவிற்கு துணைபுரியும் அதிநவீன ஆற்றல்களை எச்டிஎக்ஸ் உருவாக்கும்," என்று திருமதி டியோ கூறினார்.
இவ்வாண்டு பிப்ரவரியில் வரவு செலவுத் திட்டத்தில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் இந்த அமைப்பை அறிவித்திருந்தார்.
ஆரம்பகட்டமாக, உள்துறை குழுவின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1,300 அறிவியல், தொழில்நுட்ப அதிகாரிகள் புதிய அமைப்பில் பணிபுரிவர்.
நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக மசோதாவைத் தாக்கல் செய்த திருமதி டியோ, உள்துறை குழுவிற்கு எச்டிஎக்ஸ் எவ்வாறு ஆதரவளிக்கும் என்பதை எடுத்துரைத்தார்.
உதாரணத்திற்கு, அவசரகால தொலைபேசி அழைப்புகள் என வரும்போது, அவசரச் சேவையை வழங்குபவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உதவும்.
"ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20,000 அவசரகால அழைப்புகள் வரும் வேளையில், அழைப்புகளை ஏற்று சேவைகளைச் செயல்படுத்துவதற்கான நேரத்தை இத்தகைய தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும்," என்றார் திருமதி டியோ.
பயணிகளுக்கு கூடுதல் சௌகரியத்தை வழங்கும் அதே வேளையில், பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்காத புதிய குடிநுழைவுச் சோதனை முறை தொடர்பில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்துடன் இணைந்து எச்டிஎக்ஸ் பணியாற்றும் என்றும் திருமதி டியோ குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ள இந்தப் புதிய குடிநுழைவுச் சோதனை முறை, 'பயோமெட்ரிக்' தகவலைப் பெறுவது, அறிவார்ந்த உணர்கருவிகளின் பயன்பாடு உட்பட தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றார் அவர்.

