ரசாயனங்களும் இதர பொருட்களும் கொண்ட கழிவுநீரைப் பொதுச் சாக்கடைகளில் சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றத்திற்காக 2014ஆம் ஆண்டு முதல் 119 நிறுவனங்களுக்கு எதிராகப் பொதுப் பயனீட்டுக் கழகம் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இவற்றுள் 21 நிறுவனங்கள் இரண்டாம் முறையாக அதே குற்றத்தைப் புரிந்திருந்தன. மேலும் 23 நிறுவனங்கள் இருமுறைக்கு மேலாக அதே குற்றத்தைப் புரிந்திருந்தன. அடுத்தடுத்து குற்றம் புரியும் நிறுவனங்களில் பொதுப் பயனீட்டுக் கழகம் மாதம் இருமுறை வரை அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ளும் என சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று கூறினார்.
அந்நிறுவனங்களுக்கு $100,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். முதல் முறை குற்றம் புரிவோருக்கு $50,000 வரையிலான அபராதம் விதிக்கப்படுகிறது.
தொழில்துறைக்குப் பயன்படுத்திய நீரை அல்லது கழிவுநீரைச் சாக்கடைகளுக்குள் வெளியேற்ற அனுமதிக்கப்பட்டிருக்கும் 5,000 நிறுவனங்களில் பெரும்பாலானவை, நிர்ணயிக்கப்பட்டுள்ள தர விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதாக டாக்டர் கோர் தெரிவித்தார். பாட்டாளிக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் கோ எழுப்பிய கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
ஒரு "பிரபலமான பேக்கரி கடை" பலமுறை குற்றம் சாட்டப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் கோ, தற்போதைய நடவடிக்கைகள் போதுமானவையா எனக் கேட்டார்.
அவர் சுட்டிக்காட்டியது "பிரெட்டாக்" எனும் உணவு தயாரிப்பு நிறுவனம். அந்நிறுவனம், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக 'கிரிஸ்', ஹைட்ரோகார்பன் அல்லாத எண்ணெய்யும் கலந்திருந்த கழிவுநீரை 2016, 2017 ஆண்டுகளில் பொதுச் சாக்கடைகளில் வெளியேற்றியதற்காக $16,300 அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகபட்ச அபராதம் $100,000 ஆக இருந்தபோதிலும், ஒன்றுக்கு மேற்பட்ட முறை குற்றம் புரிவோருக்கு இதுவரை $20,000க்கு மேலாக அபராதம் விதிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் கோ, அபராதம் போதுமானதா எனக் கேட்டார்.
தடுப்பு நடவடிக்கைகளும் தண்டனைகளும் மேம்படுத்தப்பட்டிருப்பதாக டாக்டர் கோர் பதிலளித்தார். குற்றம் புரிவோருக்கு அபராதம் மட்டுமன்றி சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என்றார் அவர்.
வெளியேற்றப்படும் கழிவுநீரில் ஆபத்தான அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் கலந்திருக்கும் நிலையில், பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் எழுத்துபூர்வ அனுமதியைத் துண்டிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

