இருநூற்றாண்டு நிறைவு அனுபவக் கண்காட்சி உட்பட சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு விழாவின் முக்கிய அம்சங்களைத் தக்க வைப்பதற்கான பல்வேறு வழிகளை சிங்கப்பூர் இருநூற்றாண்டு நிறைவு அலுவலகம் ஆராயவிருக்கிறது.
இருநூற்றாண்டு நிறைவு விழாவின் கண்காட்சி, சமூகப் படைப்புகள், வெளியீடுகள் போன்ற அம்சங்களைத் தக்கவைக்கும் திட்டங்களை அலுவலகம் "உரிய காலத்தில்" பகிர்ந்துகொள்ளும் எனப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஃபோர்ட் கேனிங் சென்டரில் நடைபெறும் இருநூற்றாண்டு நிறைவு அனுபவக் கண்காட்சி செப்டம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது.
இக்கண்காட்சி ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து, இதுபோன்ற பல கோரிக்கைகள் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பதாகவும் அவற்றை அலுவலகம் பரிசீலனை செய்வதாகவும் குமாரி இந்திராணி தெரிவித்தார்.
"அதிகமான சிங்கப்பூரர்கள், குறிப்பாக இளையர்கள் இக்கண்காட்சியை அனுபவிக்க வேண்டும் என வருகையாளர்கள் நினைக்கின்றனர். சிங்கப்பூருக்கு வரும் வருகையாளர்களும் புதிய குடிமக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் நமது வரலாற்றை அறியும் வகையில் இக்கண்காட்சி நிரந்தரமாக்கப்படவேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்," என்றார் அவர்.
கண்காட்சியை நீட்டிப்பதற்கான பரிசீலனையில் கூடுதல் செலவு, தொழில்நுட்பச் சிக்கல்கள் போன்ற பற்பல அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
இந்தக் கண்காட்சிக்கு இதுவரை 300,000க்கும் அதிகமான வருகையாளர்கள் சென்றுள்ளனர். அவர்களில் 95 விழுக்காட்டிற்கு அதிகமானோர், கண்காட்சி குறித்து நேர்மறையான கருத்துகளைக் கூறியதை குமாரி இந்திராணி சுட்டினார்.

