'ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களில் சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை'

'ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களில் சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை'

1 mins read

ஹாங்காங்கில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் அங்கு வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு நேரடியாக பாதிப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஹாங்காங்கில் ஏறக்குறைய 15,000 சிங்கப்பூரர்கள் வசிப்பதாக கூறிய அவர், அங்கு பயணம் மேற்கொள்பவர்கள் வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

"ஹாங்காங்கில் வசிக்கும் சிங்கப்பூரர்களும் அங்கு செல்பவர்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க வேண்டும்.

"விழிப்புடன் இருங்கள், உள்ளூர் சட்ட திட்டங்களை மதித்து செயல்படுங்கள், உள்ளூர் ஊடகங்களின்வழி ஆக அண்மைய நிலவரத்தைக் கண்காணியுங்கள், ஹாங்காங்கில் உள்ள உயர் துணைத் தூதரகம் வெளியிடும் தகவல்களைக் கேட்டறியவும்," என்று டாக்டர் விவியன் அறிவுறுத்தினார்.

சிங்கப்பூரர்கள் போதுமான அளவு பயணக் காப்புறுதி வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குற்றவாளிகளை நாடுகடத்தும் சர்ச்சைக்குரிய மசோதா தொடர்பில் ஹாங்காங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு ஹாங்காங், சீன அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவை இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் சாலைகள் மூடப்பட்டன. விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் ரயில் சேவைகள் முடக்கப்பட்டன.

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை 400க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.