பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்குமாறு சுற்றுப்புற, நீர்வள அமைச்சை மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் கேட்டுக்கொண்டுள்ளார்.
"நான் வெளிநாடுகள் செல்லும்போது பார்த்திருக்கிறேன். பிளாஸ்டிக் பை ஒன்றுக்கு ஐந்து காசு அல்லது 10 காசு செலுத்த சொல்கின்றனர். கட்டணம் எதுவும் செலுத்தாமல் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதே பெரும்பாலான பயனீட்டாளர்களின் பொதுவான மனப்போக்கு," என்று நாடாளுமன்றத்தில் அவர் நேற்று கூறினார்.
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்குக் கட்டண முறையை அறிமுகப்படுத்துமாறு கோரும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் திரு லிம்மும் ஒருவர்.
பிரிட்டனில் கட்டண முறை நடப்புக்கு வந்த பிறகு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு 80 விழுக்காடு குறைந்திருப்பதை நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் சுட்டினார்.
"பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. ஆனால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க அவற்றுக்கான கட்டணத்தை அறிமுகப்படுத்துமாறு கோருகிறோம்," என்றார் அவர்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் விதிக்குமாறு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் திரு இங் பரிந்துரைத்திருந்தார்.
பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்க சிங்கப்பூர் ஏன் முன்வரவில்லை என்று தம்மிடம் குடியிருப்பாளர்களில் பலர் கேள்வி எழுப்புவதாக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
பிளாஸ்டிக் பைகளில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசப்படும் அனைத்து விதமான பொருட்களின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டையும் குறைப்பதே இலக்கு என்று அவர் விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூரில் பிளாஸ்டிக் கழிவு உட்பட அனைத்து கழிவு பொருட்களும் எரிக்கப்படுவதால், குப்பை நிரப்பும் நிலத்தை அதிகம் சார்ந்திருக்கும் மற்ற நாடுகள் எதிர்கொள்ளும் அதே மாதிரியான சவால்களை சிங்கப்பூர் சந்திப்பதில்லை என்று டாக்டர் கோர் சொன்னார்.
உயர்மாடி பொது வீடமைப்புகளில் வசிக்கும் பெரும்பாலான சிங்கப்பூரர்கள், சுகாதாரக் காரணங்களுக்காக குப்பைகளைப் பையில் போட்டு வீசுவதை டாக்டர் கோர் சுட்டினார்.
"அத்தகைய முயற்சிகளை நாம் கைவிட விரும்பவில்லை. குப்பைகளைப் பொறுப்பில்லாமல் வீசுவதால் பூச்சி, எலித் தொல்லை போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் உருவெடுக்கும்," என்றார் அவர்.
மற்ற நாடுகளில் பிளாஸ்டிக் பை உட்பட வீசப்படும் பொருட்களின் பயன்பாடு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதைத் தமது அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக டாக்டர் கோர் கூறினார்.

