அடுத்த மாதத்திலிருந்து, வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் கட்டடங்களின் கீழ்த்தளங்களிலும் பொது நடைவழிகளிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்த முடியாது. மக்கள் செயல் கட்சி நடத்தும் 15 நகர மன்றங்கள் இந்தத் தடையை அமலாக்குகின்றன.
குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் நோக்கம் என மக்கள் செயல் கட்சி நகர மன்ற ஒருங்கிணைப்புத் தலைவர் டியோ ஹோ பின் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பொறுப்பில்லாமல் ஓட்டுவோர் பற்றி 15 நகர மன்றங்களுக்கும் கடந்த ஓராண்டில் 190 புகார்கள் கிடைத்ததாக டாக்டர் டியோ தமது அறிக்கையில் தெரிவித்தார்.
இயந்திரச் சக்கரநாற்காலிகள் அல்லது நடமாட்ட ஸ்கூட்டர்கள் போன்ற தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பொறுப்பில்லாமல் ஓட்டுவோரை அடையாளம் காண, கட்டடக் கீழ்த்தளங்களிலும் மின்தூக்கிகளிலும் உள்ள 70,000 போலிஸ் கண்காகாணிப்பு கேமராக்களையும் மின்தூக்கி கேமராக்களையும் நகர மன்றங்கள் பயன்படுத்தும் என டாக்டர் டியோ தெரிவித்தார். தடையை மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்.

