சமரசம் குறித்த 'த சிங்கப்பூர் கன்வென்ஷன்' ஒப்பந்தம் நேற்று சிங்கப்பூரில் கையொப்பமானதைத் தொடர்ந்து, இது மிக விரைவிலேயே அமலாக்கம் காணும் என்று எதிர்பார்ப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று கூறினார்.
சக்திவாய்ந்த பொருளியல் நிலையில் உள்ள சீனா, அமெரிக்கா, இந்தியா, தென்கொரியா உள்பட 46 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் இதனைத் தெரிவித்தார்.
ஒப்பந்தம் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தியதிலும் உடன்படிக்கையை வடிவமைப்பதிலும் சிங்கப்பூர் முக்கிய பங்காற்றியதாகவும் திரு சண்முகம் குறிப்பிட்டார். நாடுகளுக்கிடையே சமரசம் காணும் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் முதலில் சிங்கப்பூர் சார்பாக திரு சண்முகம் கையெழுத்திட்டார்.
இதுவரை இத்தகைய சமரசத் தீர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்தப்பட முடியாது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் யாவும் இனி தங்கள் நீதிமன்றங்களில் அனைத்துலக வர்த்தகத் தீர்வு ஒப்பந்தங்கள் அமலாக்கம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
அடுத்தடுத்து மற்ற நாடுகளும் இதில் கையெழுத்திடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். அடுத்த ஆண்டு இடைப்பகுதிக்குள் ஒப்பந்தம் அமலாக்கம் காணாவிட்டால் அது ஆச்சரியமானது என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் 'Aranda Singapore Convention on Mediation' என ஓர் ஆர்க்கிட் வகை மலருக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

