ஹலிமா: வேலை கிடைப்பதால் முன்னாள் கைதிகள் மீண்டும் குற்றம் புரிவதைத் தடுக்கலாம்

ஹலிமா: வேலை கிடைப்பதால் முன்னாள் கைதிகள் மீண்டும் குற்றம் புரிவதைத் தடுக்கலாம்

1 mins read

சிறைத் தண்டனையை நிறைவேற்றிய பின்னர் தனக்கென ஒரு வேலையைத் தேடிக்கொள்வது மீண்டும் குற்றம் புரிவதைத் தவிர்க்க உதவுகிறது. இதை முன்பைக் காட்டிலும் இப்போது அதிகமான கைதிகள் உணர்ந்துள்ளனர் என்று நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார்.

சாங்கிச் சிறைச்சாலை வளாகத்திற்குச் சென்றிருந்த அதிபர் ஹலிமா, இதைக் குறிப்பிட்டதுடன் 2,336 கைதிகள் சென்ற ஆண்டு வேலைவாய்ப்புத் தொடர்பாக சிங்கப்பூர் மறுவாழ்வு தொழில்கள் கூட்டுநிறுவனத்திடம் (ஸ்கோர்) உதவி நாடியதாகவும் தெரிவித்தார். உதவி நாடிய கைதிகளில் 96 விழுக்காட்டினருக்கு விடுதலை ஆவதற்கு முன்னரே வேலை உறுதி ஆகியதை 'ஸ்கோர்' அமைப்பு தெரிவித்தது.

முன்னாள் கைதிகளில் 60 விழுக்காட்டினர் தங்கள் வேலைகளைக் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தக்கவைத்துக்கொண்டதையும் திருவாட்டி ஹலிமா சுட்டினார். முன்னாள் கைதிகள் மீண்டும் குற்றம் புரியாமல் இருக்க, அவர்களுக்கு ஒரு வேலை இருப்பது அவசியம். சமூகத்தில் முன்னாள் கைதிகள் மீண்டும் ஒருங்கிணைய வாய்ப்பளிக்குமாறு அதிபர் முதலாளிகளுக்கு அறை கூவல் விடுத்தார், அதிபர் ஹலிமா. வேலைவாய்ப்பு, திறன் பயிற்சிகள் போன்றவை தொடர்பில் கைதிகளுக்கான திட்டங்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் அதிகமான முதலாளிகள் ஒருங்கிணைப்புத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன்வருவது மிக முக்கியமாக உள்ளது என்றார் திருவாட்டி ஹலிமா.