காரின் உதிரி டயர் வைக்கும் பகுதியில் 12 நாய்க்குட்டிகளை வைத்துக் கடத்த முயன்றவருக்கு நேற்று 32 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் சென்ற ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று நாய்க்குட்டி களைக் கொண்டு வர முயன்ற கெல்வின் புவா யொங் லின், 36, துவாஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டார்.
ஜோகூர் பாருவிலிருந்து நாய்க்குட்டிகளை சிங்கப்பூருக்குக் கொண்டு வர 'அலெக்ஸ்' என்ற நண்பர் $1,000 தருவதாக கூறியதை அடுத்து புவா அவரைச் சந்தித்து நாய்க்குட்டிகளைப் பெற்றுக்கொண்டார். ஒரு வாடகை காரின் பின் பகுதியில் உதிரி டயர் வைக்கும் துவாரத்தில் நாய்க்குட்டிகளை வைத்து அதை டயரால் மூடி நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார்.
அதிகாலை 3.30 மணியளவில் அந்த கார் சோதனைக்காக நிறுத்தப்பட்டபோது நாய்க்குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனே அவை பறிமுதல் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன. மிக நெருக்கடியான இடத்தில் அந்த 12 நாய்க்குட்டிகளும் காற்றோட்டமின்றி இருந்ததாகவும் உணவு, தண்ணீர் தரப்படாததால் மூன்று நாய்க்குட்டிகள் பின்னர் இறந்ததாகவும் கூறப்பட்டது. உரிமமின்றி நாய்க்குட்டிகளை மலேசியாவிலிருந்து கடத்த முயன்ற குற்றச்சாட்டையும் நாய்க்குட்டிகளைக் கொண்டு வந்த முறையில் அவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டையும் புவா ஒப்புக்கொண்டார்.

