கடுமையாக்கப்படும் புதிய உரிமக் கட்டமைப்பு

கடுமையாக்கப்படும் புதிய உரிமக் கட்டமைப்பு

2 mins read

வாடகை வாகனங்களுக்கான செயலிகள் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இனி ஓர் ஒழுங்குமுறையுடன் உரிமம் வழங்கும் கட்டமைப்பைப் பயணிகள் எதிர்பார்க்கலாம் என்று நேற்று நாடாளுமன்றத்தில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார்.

கடுமையாக்கப்படும் இப்புதிய உரிமக் கட்டமைப்பால் அதிகாரிகள் பாதுகாப்புத் தரத்தை வலியுறுத்த இயலும். அத்துடன் விதிமீறல் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க முடியும். இதன்படி இனி இருவகை உரிமங்கள் இருக்கும். தற்போதைய டாக்சி நிறுவனங்களுக்குரியது ஒன்று. மற்றொன்று 'கிராப்', 'கோஜெக்' ஆகிய நிறுவனங்களுக்குரியது.

குறைந்தது 800 வாகனங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும். அதற்குக் குறைவான எண்ணிக்கையில் வாகனங்கள் உள்ள நிறுவனங்களுக்கு உரிமம் விண்ணப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கான பயணி போக்குவரத்துக்கான சட்டம் குறித்த விவாதத்தை டாக்டர் ஜனில் சபையில் முன்வைத்தபோது இதனைக் குறிப்பிட்டார்.

இச்சட்டத்தின்கீழ் உரிமம் இல்லாமலோ விலக்கு அளிக்கப்படாமலோ சேவை வழங்குவோருக்கு $10,000 வரை அபராதமோ ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து குற்றம் புரிபவருக்குக் கூடுதலாக ஒரு நாளுக்கு $500 அபராதமும் விதிக்கப்படும். அத்துடன் இந்த நிறுவனங்களுக்காக வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதும் குற்றம் சாட்டப்படும்.

இப்புதிய உரிமத் திட்டத்தால் பாதுகாப்பு குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இயங்கும். விபத்துகளின் எண்ணிக்கையையும் ஓட்டுநர்களின் குற்றங்களையும் ஆணையத்தால் கண்காணிக்க முடியும் என்றார் டாக்டர் ஜனில்.

அதிகமான விபத்துகளுடன் அதிகக் குற்றங்களையும் புரியும் ஓட்டுநர்களால் அந்தந்த நிறுவனங்களும் தண்டிக்கப்படும்.

மேலும் பயணிகள், ஓட்டுநர்கள், சாலைப் பயனாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்காக வாகனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதையும் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் என்றார் அமைச்சர்.

நாட்டில் கிட்டத்தட்ட 20,000 டாக்சிகளும் 45,000 தனியார் வாடகை கார்களும் உள்ளன. வாடகை வாகனப் பயணங்களில் மூன்றில் இரு பங்கு, செயலிகள் மூலமாகவும் மற்றவை சாலையில் நின்றவாறும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மற்ற நிறுவனங்களுக்காக வாகனம் ஓட்டாமல் இருக்க சிறப்புச் சலுகைகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படலாம்.

கட்டணம் தொடர்பிலும் பேசிய டாக்டர் ஜனில், பயணிகள் தங்களின் பயணத்துக்கான கட்டணத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்கு முன்னரே அது தெரிவிக்கப்படவேண்டும் என்பதை பொதுப் போக்குவரத்து மன்றம் கண்காணிக்கும் எனக் குறிப்பிட்டார். அளவுக்கு அதிகமாகக் கட்டணம் விதிப்பது, கட்டண ஏய்ப்பு தொடர்பிலும் மன்றம் நடவடிக்கை எடுக்கும்.