அதிபர் ஆலோசனை மன்றத்தில் அதிக காலம் அதன் தலைவராக சேவையாற்றிய 85 வயதாகும் திரு ஜே.ஓய். பிள்ளைக்கு நாட்டின் ஆக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தெமாசெக் (உச்சத்தகுதி) கிடைத்துள்ளது.இந்த உயரிய விருதைப் பெறும் 11வது சிங்கப்பூரராக அவர் திகழ்கிறார்.
சிங்கப்பூரின் முதலாவது பிரதமரான அமரர் லீ குவான் இயூ அனுபவம் வாய்ந்த இந்த அர சாங்க அதிகாரியை "அமெரிக்காவின் தலைசிறந்த அறிவார்ந்தவர்களுக்கு ஒப்பானவர்," என்று புகழ்ந்துள்ளார்.
திரு பிள்ளை, நிதி, தற்காப்பு, தேசிய வளர்ச்சி ஆகிய அமைச்சுகளின் நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றிவர். சிங்கப்பூர் பங்குச் சந்தை, டிபிஎஸ் வங்கி ஆகியவற்றின் தலைவர், சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனம், சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் என மேலும் சில பதவிகளை திரு பிள்ளை வகித்தார். அதிபர் ஆலோசனை மன்றத்தின் தலைமைப் பொறுப்பை 2005ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை வகித்தவர் திரு பிள்ளை.
1999ஆம் ஆண்டு சிங்கப்பூர் பங்குச் சந்தையின் உருவாக்கத்தை மேற்பார்வையிட்ட திரு பிள்ளை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார். 1972ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திரு பிள்ளை, 12 விமானங்களைக் கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை 1996ஆம் ஆண்டில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சமயத்தில் உலகின் தலைசிறந்த விமான நிறு வனங்களில் ஒன்றாக உருமாற்றியிருந்தார்.
"அரசாங்க சேவையில் நான் பணியாற்றிய சமயத்தில் மறக்க முடியாத, அதே சமயத்தில் திருப்தியளிக்கூடிய பல நினைவுகள் உண்டு. மிக அதிர்ச்சி தந்தது என்னவென்று கேட்டால், 1885ஆம் ஆண்டில் நான் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவியேற்ற சில காலத்துக்குப் பிறகு நிகழ்ந்த பான்-எலெக்ட்ரிக் நெருக்கடியைக் குறிப்பிடுவேன்.
"சிங்கப்பூரில் இருந்த பான்-எலெக்ட்ரிக் தொழில்துறைகள் வீழ்ச்சி கண்டதை அடுத்து சிங்கப்பூர், கோலாலம்பூர் பங்குச் சந்தைகளை மூன்று நாட்களுக்கு மூட வேண்டியதாயிற்று. ஒருவழியாக அந்தத் தொழில்துறை மீட்சி கண்டது. ஆனால், அதை நவீனமயமாக்க 15 ஆண்டுகள் பிடித்தது.
"சிறந்த நினைவுகள் என்று பார்த்தால், இரு பெரும் மதியுரைஞர்களான திரு ஹோன் சுயி சென், திரு கோ கெங் சுவீ ஆகியோருடன் பணியாற்றியதே என்று கூறுவேன். இருவருக்கும் இரு வேறு குணங்கள் என்றாலும் உலகை ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்றும் வேட்கை இருவரிடம் இருந்தது. அதற்கு மேலாக அவர்கள் இருவரும் மிகச் சிறந்த மனிதர்கள். நான் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்," என்று கூறினார்.
உயரிய விருது கிடைத்தது பற்றி தமிழ் முரசுக்கு அவர் அளித்த மின்னஞ்சல் பதிலில், "இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். அரசாங்க மற்றும் அதன் தொடர்பான அமைப்புகளில் என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்," என்றார்.
லிம் சீ ஓன்
நாட்டின் அடுத்த உயரிய விரு தான ஆர்டர் ஆஃப் நீல உத்தமா (உயர் உச்சத்தகுதி) விருதைப் பெறுகிறார் முன்னாள் அமைச்சரும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான 75 வயது திரு லிம் சீ ஓன்.
சிங்கப்பூர்-சூசோ குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் தலை வரும் தேசிய மரபுடைமைக் கழகத்தின் கௌரவத் தலைவருமான திரு லிம், அதிபர் ஆலோசனை மன்றத்திலும் இடம் வகிக்கிறார்.
2000 முதல் 2008ஆம் ஆண்டு வரை கெப்பல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த திரு லிம், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் 1977 முதல் 1992ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அத்துடன், 1979 முதல் 1992ஆம் ஆண்டு வரை தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர், 1980 முதல் 1983ஆம் ஆண்டு வரை பிரதமர் அலுவலக அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
ஜெரார்ட் ஈ
சமூக சேவையில் 30 ஆண்டு களாக ஆற்றிய பணியில் திரு ஜெரார்ட் ஈக்கு மிகவும் பிடித்த அமைப்பு 'Council for 3rd Age' எனும் மூத்தோர் மன்றம்.
"துடிப்பாக மூப்படைதல் தொடர்பான யோசனையைப் பிரபலமாக்க எனக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன," என்றார் அறநிறுவன மன்றத்தின் தலைவரும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தலைவருமான திரு ஈ.
"அப்போதைய சமூக மேம்பாடு, இளையர், விளையாட்டுத்துறை அமைச்சு எனது துடிப்பாக மூப்படைதல் தொடர்பான யோசனைக்குப் பச்சைக் கொடி காட்டியவுடன், உடனடியாக அதன் தொடர்பான படிவங்களைச் சமர்ப்பித்தேன்.
"வருடாந்திர மூத்த குடிமக்கள் வாரத்தின் இடத்தை மூத்தோர் மன்றம் எடுத்துக்கொண்டது. இப்போது மூத்தோர் மன்றம் அதன் புதிய தலைமைத்துவத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது," என்று கூறும் திரு ஜெரார்ட் ஈக்கு மதிப்புமிக்க சேவை விருது கிடைத்துள்ளது.
"இந்த விருது எனக்கு சிறப்பான ஒன்றாகத் திகழ்கிறது. காரணம், காலஞ்சென்ற எனது தந்தையும் வர்த்தகரும் நன்கொடையாளருமான திரு ஈ பெங் லியாங்குக்கும் இதே மதிப்புமிக்க சேவை விருது 1985ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது," என்றார்.
ஆர்டர் ஆஃப் தெமாசெக் விருதும் ஆர்டர் ஆஃப் நீல உத்தமா விருதும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அதிபரால் வழங்கப்படுகின்றன.
டாக்டர் ஈயைத் தவிர, மதிப்புமிக்க சேவை விருதை செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முதலீட்டு சபையின் தலைவருமான திரு ஆங் கோங் ஹுவாவும் மத்திய சேமநிதிக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம் ஆகியவற்றின் தலைவரான திரு சியாங் சீ ஃபூவும் பெறுகின்றனர்.
ஹோ பெங்; யாத்திமான் யூசோஃப்
மெச்சத்தகுந்த சேவை விருதை கல்வி அமைச்சின் ஆலோசகரும் கல்வி அமைச்சின் முன்னாள் தலைமை இயக்குநருமான திருவாட்டி ஹோ பெங்கும் மலாய் மொழி மன்றத்தின் ஆலோசகர்கள் குழுவின் தலைவருமான திரு யாத்திமான் யூசோஃப்பும் பெறு கின்றனர்.
விருது பெற்ற இந்தியர்கள்
பொதுச் சேவை நட்சத்திர விருது (பார்) பெற்ற தேசிய குற் றத்தடுப்பு மன்றத்தின் தலைவரான திரு ஜெரார்ட் பாலேந்திரன் சிங்கம், பொதுச் சேவை நட்சத்திர விருது பெற்ற கான்பெரா சமூக மன்ற நிர்வாகக் குழுத் தலைவரான திருமதி கல்யாணி எஸ் ராமசாமி, கல்வி அமைச்சின் சார்பில் பாட்லி உயர்நிலைப் பள்ளி ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் திரு கே.வி.ஏ. உலகநாதன், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சார்பில் சிறுவர், இளையர் இல்லங்கள் மறுஆய்வுக் குழுவின் தலைவர் திரு ஆர். ராஜாராம், கல்வி அமைச்சு சார்பில் பொது நிர்வாக வெள்ளிப் பதக்கம் பெற்ற ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பதிவாளர் திரு டபிள்யூ, சண்முகசுந்தர், தொடர்பு, தகவல் அமைச்சின் சார்பில் பொதுச் சேவை விருது பெற்ற தேசிய நூலக வாரிய ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு அருண் மகிழ்நன், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சார்பில் பதிவுபெற்ற வளர்ப்பு பெற்றோர் திருவாட்டி சாரதா, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சார்பில் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் ஊழியர் சங்கத்தின் தலைவர் குமாரி கே. தனலட்சுமி ஆகியோர் விருது பெற்ற இந்தியர்களில் சிலர்.

