சிங்கப்பூரின் 54வது தேசிய தினத்தை முன்னிட்டு நேற்று தீவின் பல்வேறு இடங்களில் தேசிய தினப் பற்றுறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அந்த வகையில் நேற்றுக் காலை இஸ்தானாவில் நடைபெற்ற பற்றுறுதிச் சடங்கில் பிரதமர் லீ சியன் லூங், அதிபர் ஹலிமா யாக்கோப், மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், இஸ்தானா, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஊழியர்கள், ராணுவ போலிஸ் படையினர் ஆகியோர் நாட்டுப் பற்றுறுதியை எடுத்துக்கொண்டனர்.
ஹை ஸ்திரீட்டில் உள்ள கருவூலக் கட்டடத்தில் அமைந்துள்ள நிதி அமைச்சு, வர்த்தக தொழில் அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியவற்றின் அமைச்சர்களும் அதிகாரிகளும் நேற்று தங்கள் தேசிய தினப் பற்றுறுதியை எடுத்துக்கொண்டனர்.
தற்காப்பு அமைச்சு தலை மையகத்தில் தற்காப்பு அமைச்சர் இங் ஹெங் என், தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், தற்காப்புப் படைத் தலைவர் லெஃப்டினென்ட் ஜெனரல் மெல்வின் ஓங், ராணுவம், ஆகாயப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகள் போன்றோர் தங்கள் நாட்டுப் பற்றுறுதியை எடுத்துக்கொண்டனர்.
கரையோரப் பூந்தோட்டத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சு தனது பற்றுறுதி நிகழ்ச்சியை நடத்தியது. அதில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங், அமைச்சின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு பேசிய திரு வோங், தேசிய வளர்ச்சி அமைச்சின் பணியாற்றும் முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
நாட்டு நிர்மாணத்தின்போது அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பும் தியாக மனப்பான்மையும் நாம் இன்று அனுபவித்து வரும் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொன்னார்.
இதற்கிடையே, நேற்று மாலை ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபையின் தேசிய தின விருந்தில் பேசிய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், "சிங்கப்பூர் உட்பட மற்ற நாடுகளில் வெளிப்புற சக்திகள் தங்கள் சித்தாந்தங்களைப் புகுத்த முற்படலாம். ஆனால், நாம் எப்போதும் நம் நாட்டு நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
"உலக நாடுகள் அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் சிங்கப்பூர் அவற்றுடன் நட்புக்கரம் நீட்டி நீண்டகால உறவுக்கு வழிவகுத்து வருகிறது.
"அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் வர்த்தக பதற்றம் நமக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற போதிலும் எந்தச் சவாலுக்கும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்," என்று அமைச்சர் இங் அங்கு
குழுமியிருந்த வர்த்தகர்களிடம் வலியுறுத்தினார்.

