தந்தை டேன் ஓங்கிற்கும் தாயார் சூக்கும் ஒரு பெண் குழந்தை இன்று பிறந்தது. அதற்கு மேகன் என்ற பெயரை அவர்கள் சூட்டியுள்ளனர். இந்த தேசிய தினக் குழந்தை இவர்களது ஏழாவது பிள்ளையாகும்.
கே கே மகளிர் சிறார் மருத்துவமனையில் அந்தக் குழந்தை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் பிறந்தது.
48 வயது திரு ஓங், நிர்வாகியாகவும் துணைப்பாட நிலையம் ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிகிறார். திரு ஓங்கின் மனைவி ஓர் இல்லத்தரசி. அவர்களது ஆக மூத்த பிள்ளைக்கு 19 வயது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தங்களது 20ஆம் ஆண்டு திருமண நிறைவைக் கொண்டாடிய அந்தத் தம்பதியர், தங்கள் வீட்டில் மீண்டும் மழலைச் சத்தம் கேட்கும் என எதிர்பார்க்கவில்லை.
மூன்றுக்கும் அதிகமான பிள்ளைகளை வளர்ப்பதே சிரமமாகக் கருதும் பலருக்கு மத்தியில் இந்தக் குடும்பம் துணிச்சலுடன் ஏழாவது பிள்ளையை வரவேற்றுள்ளது.
"ஆறு வருடங்களுக்கு முன்னர் எங்களுக்கு ஆறாவது முறையாக குழந்தைப் பிறந்தது. அத்துடன் எங்கள் குடும்பம் முழுமை அடைந்துள்ளதாக அப்போது நான் எண்ணியிருந்தேன். ஆனால் கடவுளின் சித்தமோ வேறு என நினைக்கிறேன்," என்றார் திருமதி ஓங்.
தன்னை நன்றாக பராமரித்த மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக திருமதி ஓங் சொன்னார்.
"சிங்கப்பூரின் பிறந்தநாளன்று இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தது இன்னும் சிறப்பு. மேலும் அதிகமான குழந்தைகளைப் பெறுவதில் சிங்கப்பூர் என்றுமே ஆவலாய் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தக் குழந்தை சிங்கப்பூருக்கான பரிசு என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் நிறையவே தேசிய சேவை செய்திருப்பதாக என் நண்பர்கள் கூறுவர் " என்றார் அந்தத் தாய்.

