கடந்த புதன்கிழமையன்று சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற திரு சாவ்டா அங்கூர், சிங்கப்பூரர் என்ற நிலையில் முதல்முறையாக இன்று தேசிய தினத்தைக் கொண்டாடினார். இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த திரு அங்கூர், கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
"சிங்கப்பூரராக தேசிய தினத்தைக் கொண்டாடுகிறேன். இது எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. சிங்கப்பூரின் ஒரு அங்கமாகிவிட்டேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. எனது மனைவியும் மகனும் சிங்கப்பூரர்கள்," என்றார் 32 வயது திரு அங்கூர்.
திரு அங்கூரின் குடும்பத்துடன் சேர்ந்து கிட்டத்தட்ட 2,500 குடியிருப்பாளர்கள், தேசிய சேவையாளர்கள், புதிய சிங்கப்பூரர்கள், மாணவர்கள் ஆகியோர் டெக் கீ தேசிய தினப் பற்றுறுதி சடங்கில் கலந்துகொண்டனர்.
பிரதமர் லீ சியன் லூங், டெக் கீ வட்டாரத்தில் நடைபெற்ற சமூக நடையில் ஈடுபட்டு வழியில் குடியிருப்பாளர்களுக்கு சிங்கப்பூர் கொடிகளைத் தந்தார்.
டெக் கீ சமூக நிலையத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியிலும் பிரதமர் லீயும் அவரது மனைவி திருவாட்டி ஹோ சிங்கும் கலந்துகொண்டனர். பாத்லைட் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் திருவாட்டி ஷரிலின் ஜெஃபர்சனின் தலைமையில் அனைவரும் சிங்கப்பூர் பற்றுறுதியை எடுத்துக்கொண்டனர்.
"தேசிய தினக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் அனைத்து இன மக்களுக்கு மத்தியில் யுரேஷிய சமூகத்தினரைப் பிரதிநிதிப்பதில் நான் பெருமை அடைகிறேன். சிங்கப்பூர் தொடர்ந்து இன நல்லிணக்கத்துடன் வளர்ச்சியடைய வேண்டும் என விரும்புகிறேன்," என்றார் அவர்.

