ஜோகூரின் மெர்சிங் நகருக்கு அருகில் உள்ள எண்டாவ் கடற்பகுதியில் 'காயாக்கிங்' எனும் படகு வலித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் விரிவடைந்திருப்பதாகவும் அந்த நடவடிக்கையில் உதவுவதற்காக சிங்கப்பூர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தில் இருக்கிறார்கள் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
காணாமல் போனவர்கள் 52 வயது திரு டான் எங் சூன், 64 வயது திருவாட்டி புவா கியோக் டின் என்றும் மலேசிய அமைப்புகள் அடையாளம் காட்டியுள்ளன.
எண்டாவ் தீவுகளுக்கு அரு கில் 'காயாக்கிங்' நடவடிக்கையில் கடந்த வியாழக்கிழமை மாலை 5.40 மணிக்கு 13 சிங்கப்பூரர்கள் ஈடுபட்டிருந்தபோது, திரு டானும் திரு புவாவும் கடல் கொந்தளிப்பு காரணமாகவும் பலத்த காற்று காரணமாகவும் அக்குழுவிலிருந்து பிரிந்து சென்றனர் என்று கூறப்பட்டது.
அப்போது அக்குழுவினர் தெலுக் கேசாங்கிலிருந்து மெர்த்தாங் தீவுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
காற்றின் திசை மற்றும் நீரோட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தேடி மீட்கும் குழுவினர் அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து வடக்கு நோக்கி தேடுதல் பணியை முடுக்கி விட்டிருப்பதாக மெர்சிங் மாவட்டத்தின் தற்காலிக போலிஸ் தலைவர் முகம்மது நோர் முகம்மது இசா நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
மலேசிய கடல்துறை அமலாக்க அமைப்பு கொடுத்த தகவலின்படி, ஆகாயத்திலிருந்து நடத்தும் தேடுதல் நடவடிக்கை ஸ்ரீ புவாட் தீவில் வடக்கே 400 கடல்மைல் தூரத்தில் தியோமான் தீவின் வடமேற்கு திசை நோக்கி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக நடத்தப்படும் கடல்வழி தேடுதல் நடவடிக்கை, மெர்சிங் தஞ்சோங் ரெசாங்கிலிருந்து பாகாங் கோலா ரொம்பின்னுக்கு 150 கடல்மைல் தூரத்துக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
காணாமல்போன சுற்றுப்பய ணிகள் இருவர் பற்றிய தகவல் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஜோகூர் பாரு கடல்துறை மீட்பு துணை நிலையத்திடம் தெரிவிக்கப்பட்டது என்று ஜோகூர் மலேசிய கடல்துறை அமலாக்க அமைப்பின் அதிகாரிகள் கூறினர்.
உடனே பிற்பகல் 3.30 மணிக்கு பெய்போங் படகுத்துறையிலிருந்து தேடி மீட்கும் குழு ஒன்று புறப்பட்டது என்றும் மலேசிய அதிகாரிகள் கூறினர்.
ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் மலேசிய அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று விவரித்தது.
இதுவரை தேடுதல் நடவடிக்கையில் 41 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருப்பதாகவும் ஒரு ஹெலிகாப்டரும் ஆறு மீட்புப் படகுகளும் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
"காணாமல் போன சிங்கப்பூரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு வெளியுறவு அமைச்சும் ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகமும் அனைத்து உதவிகளையும் ஆதரவையும் அளித்து வருகிறது," என்று வெளியுறவு அமைச்சு நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.

