சிங்கப்பூரின் 54வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் பாடாங்குக்கு வந்த மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது ஒரு வியத்தகு மனிதர் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்த திரு கோ, "கௌரவ டாக்டர் பட்டம் பெற ஜப்பானுக்குச் சென்று அங்கு இரவு தங்கிவிட்டு, பின்னர் கோலாலம்பூருக்குத் திரும்பினார்.
"அங்கு நேற்று காலை (ஆகஸ்ட் 9ஆம் தேதி) இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை வரவேற்று அவருடன் இருநாட்டு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, பின்னர் கோலாலம்பூரில் இருந்து நேராக சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பாடாங்குக்கு வந்து சேர்ந்தார்.
"அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் ஒரு வியத்தகு பெண்மணிதான். சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று அவர்கள் சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்து விட்டனர்.
"இது அண்டை நாடுகளான சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வலுவான, வரலாற்றுபூர்வமான, பிரிக்கமுடியாத உறவைப் பிரதிபலிக்கிறது. இரு நாடுகளின் உறவு இன்னும் வலுப்பெற வேண்டும்," என்றார்.
நேற்று முன்தினம் அணி வகுப்பின்போது முக்கிய பிரமுகர் கூடத்தில் திரு கோ, டாக்டர் மகாதீருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.
பிரதமர் லீயின் அழைப்பின் பேரில் மூன்று நாட்டுத் தலைவர்களும் தேசிய தின அணிவகுப்பைப் பார்வையிட வந்திருந்தனர். அவர்கள் மூவரையும் திரு லீ, அணிவகுப்பு தொடங்குவதற்கு முன் தேசிய கலைக்கூடத்தில் சந்தித்து, சிங்கப்பூர் வந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பில் தாமும் தம் துணைவியாரும் பங்கேற்றது குறித்து டாக்டர் மகாதீர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார்.
"நாட்டின் 54வது தேசிய தினத்தையும் இருநூற்றாண்டு நிறைவு அங்கங்களையும் மலேசியா, இந்தோனீசியா, புருணை நாட்டுத் தலைவர்கள் உட்பட பல வெளிநாட்டு நண்பர்களுடன் கண்டு களித்ததில் மிக்க மகிழ்ச்சி," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்.
"நமக்கு மிக நெருக்கமான அண்டை நாட்டுத் தலைவர்கள் சிங்கப்பூருக்கு வந்தது பெருமையளிக்கிறது. அவை நமக்கு விலைமதிப்புமிக்க உறவுகளாகும்," என்றும் திரு டியோ குறிப்பிட்டிருந்தார்.
தேசிய தின அணிவகுப்பு குறித்து ஃபேஸ்புக்கில் கருத்துரைத்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், "இருநூற்றாண்டு நிறைவு தேசிய தின அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழு, பங்கேற்பாளர்கள், தொழில்நுட்பர்கள், தொண்டூழியர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்," என்றார்.

