குப்பை அகற்றுவது இந்தக் குடும்பத்தின் தொண்டூழியம்

குப்பை அகற்றுவது இந்தக் குடும்பத்தின் தொண்டூழியம்

2 mins read
23d7c8ca-4765-4089-95d2-edae7aa8c682
தேசிய தின அணிவகுப்பு முடிவடைந்தவுடன் அந்தப் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி, அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய குடும்பம். (இடமிருந்து) திரு கலெப் டியோ, அவரது மனைவி ஷு யிப்பிங், பிள்ளைகள் ஐசையா டியோ, ஸெக்கரியா டியோ, ஜெடிடா டியோ. படம்: தேசிய சுற்றுப்புற வாரியம் -

சிங்கப்பூரர்கள் பலர் தேசிய தின அணிவகுப்பை வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கையில், டியோ குடும்பத்தினர் நாட்டின் பிறந்தநாளைச் சுற்றுப்புறத்துக்குச் சாதகமான முறையில் கொண்டாட தேர்வு செய்தனர்.

ஐவர் கொண்ட இந்தக் குடும்பம், சிங்கப்பூர் மாண்டரின் லயனஸ் கிளப், சிங்கப்பூர் சாரணர் சங்கம் ஆகியவற்றின் 200 தொண்டூழியர்களில் ஒரு பகுதி.

இவர்கள் தேசிய தின அணிவகுப்பு முடிவடைந்தவுடன் தங்கள் கைகளில் பைகளை ஏந்தி பாடாங்கைச் சுற்றியுள்ள பகுதி களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் இவ்வாறு செய்வதைப் பார்த்து பார்வையாளர்கள் பலர் தங்கள் பங்குக்குக் குப்பைகளை அகற்றினார்கள்.

"முன்னைய ஆண்டுகளில் தேசிய தின அணிவகுப்பை வீட்டில் குடும்பமாகப் பார்த்து ரசித்து வந்தோம்," என்று கூறிய 46 வயது திரு களெப் டியோ, "வீட்டில் இருந்து கொண்டு, எங்களுக்குப் பிடித்த நொறுக்குத்தீனிகளை உண்டுகொண்டு தொலைக்காட்சி யில் தேசிய தின அணிவகுப்பைப் பார்ப்போம்.

"இந்த ஆண்டு சற்று மாறுதலாக வேறு ஏதாவது செய்யலாமா என்று என் மனைவியிடம் கேட்டேன். வாணவேடிக்கையைப் பார்த்துக்கொண்டே அர்த்தமுள்ள வகையில் தொண்டு புரிய முடிவெடுத்தோம்," என்றார் திரு டியோ.

தமது மூன்று மகன்களான எட்டு வயது ஜெடிடா, 10 வயது ஸெக்காரியா, 13 வயது ஐசையா ஆகியோர் பினிக்ஸ் சாரணர் குழுவில் உள்ளார்கள்.

அந்தக் குழுவின் மூலமாக இந்தத் தொண்டூழிய வாய்ப்பு கிட்டியது என்று விளக்கினார் திரு டியோ.

குப்பைகள் அற்ற இந்தத் திட்டத்தை பொதுச் சுகாதார மன்றம் பல்லாண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த வகையில் சிங்கே, தேசிய தின அணிவகுப்பு, சீனப் புத்தாண்டு முதல் நாள் நிகழ்ச்சி போன்ற பெரிய அளவிலான தேசிய கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தொண்டூழியர்கள் குப்பைகளை அகற்றுவார்கள்.

இத்திட்டம் 2015ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகள் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

"குப்பைகளை அகற்றும் இத்தகைய நினைவூட்டல் மூலம் அனைவரும் குப்பைகளை அகற்றி குப்பைத் தொட்டிக்குள் போட்டு, நமது சிங்கப்பூரைத் தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்க வாய்ப்பு ஏற்படுகிறது," என்றார் பொதுச் சுகாதார மன்றத்தின் நிர்வாக இயக்குநர் திரு டோனி டான்.

இத்திட்டத்தின் தொண்டூழியர்கள் பெரும்பாலும் மரினா பே நீர்முகப்பில் நிறுத்தி வைக்கப்படுவார்கள். அங்குதான் அதிகமான மக்கள் தீரண்டு வாணவேடிக்கையைப் பார்ப்பார்கள்.

பாடாங் அரங்குக்குள் உள்ள குப்பைகளை அகற்ற அங்கும் தொண்டூழியர்கள் நிறுத்தப்பட்டார்கள்.