புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று சிங்கப்பூரிலுள்ள 26 பள்ளிவாசல்களில் நடைபெறும் குர்பான் சடங்குக்காக 3,700 ஆடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன என்று சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் குர்பான் குழு (ஜேகேஎம்எஸ்) நேற்று தெரிவித்தது.
ஆடுகள் கடந்த 8, 9ஆம் தேதிகளில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தன. உடனே ஆடுகள் விலங்கு மற்றும் விலங்கு மருத்துவ சேவைகள் குழுவால் பரிசோதிக்கப்பட்டன.
ஆடுகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கின்றன என்று உறுதி செய்யப்பட்ட பின் அவை 26 பள்ளிவாசல்களுக்கும் அனுப்பப்பட்டன.
"குர்பான் சடங்கில் ஈடுபடும் தொண்டூழியர்களுக்கு சிங்கப்பூர் உணவு அமைப்புடன் இணைந்து தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன," என்றார் 'ஜேகேஎம்எஸ்' குழுவின் தலைவர் ஷரிஃபுதின் முகம்மது அலி.
குர்பான் நடைபெறும் இடங்களில் முயிஸ், ஜேகேஎம்எஸ், சிங்கப்பூர் உணவு அமைப்பு, விலங்கு மற்றும் விலங்கு மருத்துவ சேவைகள் குழு ஆகியவற்றின் அதிகாரிகள் நின்று, அனைத்து நடவடிக்கைகளும் இஸ்லாமிய விதிமுறைப்படியும் விலங்கு தொடர்பான விதிமுறைப் படியும் நடப்பதை உறுதிப்படுத்து வார்கள்.
முன்னைய ஆண்டுகளைப் போல குர்பான் சடங்கில் பங்கு கொள்ளும் குடும்பங்கள் மட்டுமே குர்பான் சடங்கைப் பார்வையிட அனுமதிக்கப்படும் என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்தது.

