பேருந்துக்குள் மறைத்து 815 பறவைகளைக் கடத்திய மலேசிய ஓட்டுநரை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர்.
சென்ற சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட பேருந்து ஒன்று உட்லண்ட்ஸ் குடிநுழைவு, சோதனைச் சாவடிக்கு வந்தது.
அப்போது அங்கிருந்த அதிகாரி களுக்கு ேபருந்து மீது சந்தேகம் ஏற்பட்டது.
பேருந்தின் பின்பக்க டயர் உள்ள பகுதியில் மாற்றம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டதால் அதிகாரிகளின் சந்தேகம் மேலும் வலுத்தது.
அதிகாரிகள் பேருந்தை நெருங்கிச் சென்று பார்த்தபோது கீச், கீச் என பறவைகளின் சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பேருந்து முழுவதும் சோதனையிட்டனர்.
அப்போது பேருந்துக்குள் பெட்டகம் போன்று உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட பகுதியில் ஏராளமான பறவைகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 15 பிளாஸ்டிக் பெட்டியில் 815 வண்ணப் பறவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் கூறினர்.
இவற்றில் 600 பறவைகள் மட்டுமே உயிர் பிழைத்தன என்றும் மற்ற பறவைகள் இறந்துவிட்டன என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
இது, அண்மைய ஆண்டுகளில் இல்லாத ஆகப்பெரிய எண்ணிக்கையிலான பறவைக் கடத்தல் என்று் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஓட்டுநரை விசாரித்ததில் பறவைகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதற்கான முறையான ஆவணங்களோ, உரிமைகளோ அவரிடம் இல்லை என்பது தெரிந்தது.
தேசிய பூங்காக் கழகத்திடம் ஓட்டுநரை குடிநுழைவு துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து கழகம் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே சட்டவிரோத பறவைக் கடத்தலுக்கு அதிக பட்சமாக 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஓராண்டு வரை சிைறத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கழகம் நினைவூட்டியது.

