சண்முகம்: சிங்கப்பூர் உட்பட அனைவருக்கும் பிரச்சினை

சண்முகம்: சிங்கப்பூர் உட்பட அனைவருக்கும் பிரச்சினை

2 mins read

ஹாங்காங்கின் நிலைத்தன்மை பாதிக்கப்படுவதால் ஒருவருக்கும் லாபமில்லை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்தில் சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி உட்பட அனைத்து நாடுகளின் நிலைத்தன்மையால்தான் சிங்கப்பூருக்கு நன்மை ஏற்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக நடைெபற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் பேசினார்.

ஹாங்காங்கில் குறிப்பிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சீனாவுக்கு விசாரணைக்கு அனுப்ப அந்த மசோதா வகை செய்கிறது.

"ஓ உனக்குத் தெரியுமா, ஹாங்காங் பாதிக்கப்பட்டால் சிங்கப்பூருக்குத்தான் நன்மை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதனை நான் நம்பவில்லை. ஹாங்காங் உட்பட வட்டார நாடுகள் நிலைத்தன்மையோடு இருந்தால்தான் சிங்கப்பூருக்கு அனுகூலம் ஏற்படும்.

"சீனா சிறப்பாக செயல்பட்டால், ஹாங்காங் சிறப்பாக செயல்படும். இந்த வட்டாரமும் சிறப்பாக செயல்படும். நாமும் நன்றாக செயல்பட முடியும். நிலைத் தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஒருவருக்கும் லாபமில்லை. நாம் உட்பட அனைவருக்கும் பிரச்சினை," என்று அமைச்சர் சொன்னார்.

ஹாங்காங்கின் சவுத்சீனா மார்னிங் போஸ்ட், சீன நாளிதழான லியான்ஹ சாவ்பாவுக்கு கடந்த வாரம் அளித்த பேட்டியில் அமைச்சர் சண்முகம் தனது கருத்துகளை முன் வைத்தார். ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் தற்போது அந்த மசோதா கைவிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்பது கோரிக்கைகளில் ஒன்று.

ஆரம்பத்தில் அமைதியான முறையில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறைச் சம்பவங்களாக மாறின. சில ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் உடைத்துக்கொண்டு நுழைந்த னர்.

அதே சமயத்தில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் விமான நிலையத்தில் குந்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டங்களால் ஹாங் காங்கில் உள்ள சொத்துகளையும் அலுவலகங்களையும் வேறு இடத்துக்கு மாற்ற சிங்கப்பூர் விரும்புகிறதா என்று கேட்டதற்கு இந்த குறுகிய காலகட்டத்தில் இது நடைபெற வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் சண்முகம் பதில் அளித்தார்.