சென்ற வெள்ளிக்கிழமையில் இருந்து காணாமல் போன இரு சிங்கப்பூரர்களைத் தேடும் பணியை மலேசிய போலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
டான் எங் சூன், 62, புவா கியோக் டின்,57, ஆகிய இருவரும் கயாக்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போயினர். இந்த நிலையில் ஜோகூர், பாகாங் கடற்பகுதிகளில் அவர்களைத் தேடும் பணி நேற்று மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
சுமார் 500 கடல் மைல் தொலைவுக்கு தேடும் பணி விரிவுபடுத்தப்பட்டதாக அதி காரிகள் கூறினர். கடல்துறை, போலிஸ், உள்ளூர் மீனவர்கள் உட்பட தேடும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
கடைசியாக வெள்ளிக் கிழமை அன்று அவர்கள் பச்சை நிற 'கயாக்' படகில் சென்று கொண்டிருந்தனர்.
இருவரும் கயாக் படகை ஓட்டுவதில் அனுபவமுள்ளவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த கயாக் படகுக் குழுவில் இடம்பெற்றிருந்த இருவரும் பின்னர் தனியாக பிரிந்துசென்றதாக நம்பப்படுகிறது.
மோசமான பருவநிலையிலும் 'கயாக்' படகு ஓட்டிகள் கடலுக்குள் சென்றுள்ளனர் என்று மெர்சிங் மாவட்ட இடைக்கால போலிஸ் தலைவர் முஹமட் நூர் முஹமட் இஸா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காணாமல் போன இருவரின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் நேற்று மெர்சிங் வந்துசேர்ந்தனர்.

