கைக்கு எட்டும் தொலைவில் புற்றுநோய் சிகிச்சை நிலையம்

கைக்கு எட்டும் தொலைவில் புற்றுநோய் சிகிச்சை நிலையம்

2 mins read

திருமதி மைமுனா அபு பக்கர், நான்காம் கட்ட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குத் தொடர்ந்து 'கீமோதெரபி' சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்காக அவர் வெகுதொலைவு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் தற்போது வீட்டுக்கு அருகில் உள்ள சமூக புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் 'கீமோதெரபி' உள்ளிட்ட சிகிச்சைகளை சிரமமின்றி மேற்கோண்டு வருகிறார்.

2017ல் சுவா சூ காங்கில் உள்ள கியட் ஹோங் சமூக மன்றத்தில் அந்த சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது.

தற்போது இந்த நிலையும் அவருக்கு கைகொடுத்து வருகிறது.

இதற்கு முன்பு திருமதி மைமுனா 45 நிமிடம் பேருந்தில் பயணம் செய்து என்சிஐஎஸ் எனும் தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வீட்டுக்கு அருகில் உள்ள நிலையத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள என்சிஐஎஸ்ஸின் துணை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் அவர் தொடர் சிகிச்சை ெபற்று வருகிறார்.

"பத்து நிமிட நடை தொலைவில்தான் உள்ளது, வசதியாக இருக்கிறது," என்கிறார் 57 வயது இல்லத் தரசியான மைமுனா கூறினார்.

கடந்த 2017ல் என்சிஐஎஸ் தொடங்கிய இரண்டு சிகிச்சை நிலையங்களில் சுவா சூ காங்கில் உள்ள நிலையமும் ஒன்று.

மற்றொன்று ஜூரோங் மருத்துவ நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இரு நிலையங்களிலும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இதை சுட்டிக்காட்டி பேசிய என்சிஐஎஸ் புற்றுநோயியல் பிரிவின் தலைவரான இைணப் பேராசிரியர் லீ சூ சின், முதல் ஆண்டிலேயே 326 பலதரப்பட்ட நோயாளிகள் சிகிச்சை நிலையத்துக்கு வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 406க்கு அதிகரித்தது.

இவ்வாண்டு நோயாளிகளின் எண்ணிக்கை 672 தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

பெரிய மருத்துவமனையில் மேற்கொண்ட ஆரம்பகட்ட 'கீமோதெரபி' சிகிச்சைக்குப் பிறகு என்சிஐஎஸ் துணை நிலையங்களில் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.