ஜோகூர்பாரு: நான்கு நாள் பொது விடுமுறைக்குப் பிறகு மலேசியாவிலிருந்து ஏராளமான சிங்கப்பூரர்கள் நாடு திரும்புவதால் சிங்கப்பூருக்குள் நுழையும் இரு சோதனைச் சாவடிகளிலும் நேற்று கடும் நெரிசல் ஏற்பட்டது.
தேசிய தினம் கொண்டாடப்பட்ட வெள்ளிக்கிழமையிலிருந்து ஹஜ்ஜுப் பெருநாள் உட்பட திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சிங்கப்பூரர்கள் பலர் விடுமுறையைக் கழிக்க மலேசியாவுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை முடிவுக்கு வந்ததால் ஏராளமான சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்.
இதனால் ஜோகூர் சுங்கத் துறை கட்டடத்துக்கு இட்டுச் செல்லும் பாதையில் சிங்கப்பூருக்குத் திரும்பும் மோட்டார் வாகனமோட்டிகள் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
மேலும் ஜோகூர் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் இடிஎல் மற்றும் ஜாலான் லிங்காரன் டாலாம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கான காரணத்தை விளக்கிய ஜோகூர் போக்குவரத்து அமலாக்க, புலனாய்வு பிரிவின் தலைவர் எம். குமரேசன், நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு சிங்கப்பூரர்கள் நாடு திரும்புகின்றனர் என்றார்.
நேற்று பிற்பகல் வேளையிலிருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது என்றும் அவர் சொன்னார். "போக்குவரத்து நெரிசல் குறித்து இதுவரை எங்களுக்கு எந்தவிதப் புகாரும் வரவில்லை. நாங்களும் இந்தப் பிரச்சினையை அறிந்து வைத்துள்ளோம். இதனால் ஜோகூர் சோதனைச் சாவடி மற்றும் இரண்டாவது இணைப்புப் பாலத்துக்கு நெருக்கமாக உள்ள வட்டாரங்களில் போக்குவரத்து போலிசாரின் எண்ணிக்கையை கூட்டியிருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே சிங்கப்பூரர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

