நேற்று உலக யானைகள் தினம். அதை சிங்கப்பூர் வலிமைமிக்க பாதுகாப்புச் செய்தியுடன் கொண்டாடியது.
உள்ளூர் வர்த்தகத்தில் யானைத் தந்தத்துக்குத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து யானைத் தந்தங்களையும் அவற்றால் செய்யப்பட்டுள்ள பொருட்களையும் சிங்கப்பூரில் விற்கவும் காட்சிக்கு வைக்கவும் முடியாது என்று தேசிய பூங்கா கழகம் அறிவித்துள்ளது.
அருகி வரும் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றுக்கான அனைத்துலக வர்த்தக ஒப்பந்தத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உயிரினங்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவதை எதிர்ப்பதில்
சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டை இந்தத் தடை காட்டு வதாகக் கழகம் கூறியது.
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை சிங்கப்பூர் சகித்துக்கொள்ளாது என்பதை இத்தடை காட்டுகிறது.
1990ஆம் ஆண்டிலிருந்து யானைத் தந்தங்களை அனைத்துலக அளவில் விற்க, வாங்க தடை விதிக்கப்பட்டது.
அன்றிலிருந்து அனைத்துலக அளவில் யானைத் தந்தங்களால் செய்யப்பட்டுள்ள பொருட்களுக்கான வர்த்தகத்தை சிங்கப்பூர் தடை செய்தது.
ஆனால் யானைத் தந்தங்களால் செய்யப்பட்டுள்ள பொருட்களை 1990ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கியதாக நிரூபிக்க முடிந்தால் அவற்றை உள்ளூரில் வர்த்தகம் செய்யலாம் என்ற அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் புதிதாக நடைமுறைக்கு வரவிருக்கும் தடை இதையும் மாற்றியமைக்கும்.
தடை நடைமுறைக்கும் வரும்போது 1990ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்ட யானைத்
தந்தப் பொருட்களையும் சிங்கப்பூரில் வர்த்தகம் செய்ய முடியாது.
தங்களிடம் இருக்கும் யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்கள் 1990ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்டவை என்பதை நிரூபிப்பது மிகவும் சிரமம் என்று நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் விலங்குகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி சங்கத்தின் தலைமை நிர்வாகியுமான திரு லுவிஸ் இங் தெரிவித்தார்.
யானைத் தந்தங்களால் செய்யப்பட்டுள்ள பொருட்களை வைத்திருப்போர் அவற்றை என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்க இரண்டு ஆண்டுகள் கால
அவகாசம் இருப்பதாக கழகம் கூறியது.
இந்த மாற்றம் சுமுகமான முறையில் நடைமுறைக்கு வர தொடர்ந்து வர்த்தகர்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக கழகம் தெரிவித்தது.
தடை விதிக்கப்படுவதற்கு முன்பு அரசாங்கக் கருத்துச் சேகரிப்பு இணையத்தளமான 'ரீச்' மூலம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பொதுமக்கள்.
அரசாங்கம் தொடர்பற்ற அமைப்புகள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் போன்றோரின் ஆலோசனை கேட்கப்பட்டதாகக் கழகம் தெரிவித்தது.
கருத்து தெரிவித்தவர்களில் 99 விழுக்காட்டினர் தடையை
ஆதரித்ததாக கழகம் கூறியது.
கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் 8.8 டன் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை கிட்டத்தட்ட 300 ஆப்பிரக்க யானைகளுக்குச் சொந்தமானவை என்று நம்பப்படுகிறது, பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களின் மதிப்பு $17.6 மில்லியன்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 177 கிலோ எடை கொண்ட செதுக்கப்பட்ட யானை தந்தத்தை சிங்கப்பூர் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
"பெரிதளவில் நடைபெறும் யானைத் தந்தம் வர்த்தகம் சிங்கப்பூரில் பிடிபடும் சாத்தியம் மிகக் குறைவு என்று வர்த்தகர்கள் நினைப்பதை இது காட்டுகிறது," என்று திரு இங் கூறினார்.
நடைமுறைக்கு வரவிருக்கும் தடையைத் திரு இங் வரவேற்கிறார்.
"தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது எல்லைகளைப் பலப்படுத்துவதே நமது அடுத்த கட்ட நடவடிக்கை.
"இத்துடன் சேர்த்து மேலும் கடுமையான தண்டனைகளை விதிக்கும்போது யானைத் தந்தம் வர்த்தகத்தை அடியோடு நிறுத்திவிடலாம்," என்றார் திரு இங்.
தடை நடப்புக்கு வந்ததும் அதை மீறுபவர்களுக்கு ஒவ்வோரு விலங்கிற்கும் $10,000 அபராதம் (மொத்த அபராதத் தொகை $100,000), 12 மாதகங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதனுடன் மேலும் கடுமையான நடவடிக்கைகளையும் தண்டனைகளையும் அமல் செய்வதும் இத்தகைய சட்டவிரோத வர்த்தகங்களுக்கு மூலகாரணமாக இருப்போரைக் கண்டுபிடிக்க அனைத்துலக அமைப்புகளுக்கு உதவும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று திரு இங் தெரிவித்தார்.

