மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிராப் காரிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தார்.
பாலர் பள்ளி ஆசிரியையான 25 வயது நூர் சியாஸ்வாணி முகம்மது ரோஸ்கடிக்குக் கடந்த புதன்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தாம்சன் மருத்துவ நிலையத்துக்குத் தமது கணவருடன் கிராப் காரில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது.
காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது குழந்தை பிறந்தது.
ஏற்கெனவே இரண்டு பிள்ளைகள் இருக்கும்போதிலும் காரில் குழந்தை பிறக்கப்போவதைப் பார்த்து தாம் பதற்றம் அடைந்ததாக குழந்தையின் தந்தை திரு கமாருல்னிசாம் கிமான் கூறினார்.
கண்மூடித் திறப்பதற்குள் குழந்தை பிறந்ததாக அவர் தெரிவித்தார்.
கேன்பரா வட்டாரத்திலிருந்து கிளம்பிய தம்பதியர் ஏறத்தாழ அரை மணி நேரம் கழித்து தாம்சன் மருத்துவ நிலையத்தை அடைந்தனர்.
திருவாட்டி சியாஸ்வாணி கிராப் கார் ஒட்டுநர் திரு சியா லாங் ஹெங்கிற்கு ஃபேஸ்புக் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். திரு சியா புரிந்துணர்வுடன் நடந்துகொண்டதாக திருவாட்டி சியாஸ்வாணி பாராட்டினார்.
"காரை அலங்கோலம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதனால் உங்களால் அன்று தொடர்ந்து கார் ஓட்டியிருக்க முடியாது.
"அதுமட்டுமல்லாது நீங்கள் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது எனக்குப் பிரசவ வலி அதிகமாகி குழந்தையும் பிறந்தது. இவற்றை எல்லாம் சகித்துக்கொண்டதற்கு நன்றி," என்றார் தாஇருவாட்டி சியாஸ்வாணி.
$15 கிராப் கட்டணத்தை திரு சியாவிடம் தம்பதியர் செலுத்தினர். கிராப் செயலி மூலம் கிராப் ஓட்டுநருக்கு அதிகபட்சமாக $8 கூடுதல் தொகை மட்டுமே கொடுக்க முடியும். இதையும் அத்தம்பதியர் கொடுத்தனர்.
அத்துடன் அவர்கள் நின்று விடவில்லை. ஓட்டுநர் திரு சியாவுக்கு இழப்பீட்டுத் தொகையாக $220யையும் அவர்கள் கொடுத்தனர். தமது மனைவியும் குழந்தையும் வீடு திரும்பிவிட்டதாக திரு கமருல்னிசாம் தெரிவித்தார்.

