வடக்கு-தெற்கு ரயில் பாதை நெடுகிலுள்ள குறிப்பிட்ட சில நிலையங்கள் முன்கூட்டியே மூடப்படும் என்றும் தாமதமாகத் திறக்கப்படும் என்றும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்சார விநியோக அமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அந்நிலையங்களின் சேவை நேரம் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வரை புக்கிட் பாத்தோக்கிற்கும் மார்சிலிங்கிற்கும் இடையிலான ஆறு நிலையங்கள் வழக்கமான நேரத்தைவிட தாமதமாகக் காலை 8 மணிக்குத் திறக்கும்.
செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை புக்கிட் பாத்தோக்கிற்கும் யூ டீக்கும் இடையிலுள்ள நான்கு நிலையங்கள் முன்கூட்டியே இரவு 11 மணிக்கு மூடும்.
பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு எஸ்எம்ஆர்டி ஆலோசனை விடுத்துள்ளது. மேல் விவரங்களுக்குத் தனது இணையத்தளத்தையும் 'எஸ்எம்ஆர்டி கனெக்ட்' செயலியையும் நாடுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

