சிங்கப்பூருக்கு அருகிலுள்ள பிரபலமான இந்தோனீசியத் தீவுகளான பாத்தாம், பிந்தான் ஆகியன கடற்கரையோர வீடுகளிலிருந்து தொழில்நுட்பப் பேட்டை வரையிலான புதிய மேம்பாடுகளுடன் பரபரப்பான வளர்ச்சி கண்டு வருகின்றன. ஆனால், சுற்றுவட்டாரத்திலுள்ள தஞ்சோங் சாவ், புவாவு, கெனாங் போன்ற சிறிய தீவுகளில் பேருந்துகள், கார்கள், மருத்துவமனைகள் அல்லது மளிகைக் கடைகள் கூட கிடையாது. தெருவோரமாக மலிவான பொரித்த உணவு வகைகளை விற்கும் கடைகள் கூட கிடையாது. இத்தீவுகளில் வசிக்கும் மக்கள் இன்னமும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கின்றனர். மின்னியற்றிகளிலிருந்து மின்சாரம் பெறுகின்றனர். இவர்களது பிள்ளைகளில் பலரும் பள்ளிகளுக்குப் படகோட்டிச் செல்கின்றனர்.
இப்போது இத்தீவுகளுக்குப் பெரும் மாற்றம் காத்திருக்கிறது. பாத்தாம், பிந்தான் ஆகியவற்றை இணைக்கும் புதிய ஏழு கிலோமீட்டர் நீள கடற்பாலம் அடுத்த ஆண்டு கட்டப்படவிருக்கிறது. இப்பாலம் தஞ்சோங் சாவ், புவாவு ஆகிய தீவுகளைக் கடந்து செல்லும். பாலம் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்போது இதுவே இந்தோனீசியாவின் ஆகப்பெரிய பாலமாக இருக்கும்.
ரியாவ் தீவுகளில் இணைப்பை மேம்படுத்தவும், பிந்தானில் வளர்ச்சியைத் தூண்டவும், சிங்கப்பூருடனான வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அறிமுகப்படுத்தும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 4 ட்ரில்லியன் ரூப்பியா (390 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) செலவில் பாலம் கட்டப்படவிருக்கிறது. இரண்டாவது தவணைக் காலத்தைத் தொடங்கியிருக்கும் அதிபர் ஜோக்கோ, முதலீடுகளுக்கு இடையூறாக உள்ள அலுவல் நடைமுறைகளைக் குறைத்து, இந்தோனீசிய இளையரின் தொழில்முறை திறன்களை உயர்த்த உறுதி பூண்டிருக்கிறார்.
திரு ஜோக்கோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இவ்வாண்டு பிற்பகுதியில் சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர். அந்தச் சந்திப்பின் விளைவாகப் புதிய உடன்பாடுகளும் கூட்டுத் திட்டப்பணிகளும் ஏற்படும் என தொழில் சமூகம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது.

