திருமண வாழ்க்கையில் ஈடுபடவும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் இன்றைய இளையர்களுக்குச் சற்று நேர அவகாசம் கொடுங்கள் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ அறைகூவல் விடுத்துள்ளார்.
சென்ற ஆண்டின் திருமண விகிதமும் பிறப்பு விகிதமும் மேலும் சரிந்தன.
ஆனால் மக்கள் தொகை விவகாரங்கள் தொடர்பில் மேற்பார்வையிட்டு வரும் திருமதி டியோ, சரிவாக இருந்தாலும் இத்தகைய போக்குகள் குறித்து நீண்டகால ஆய்வு செய்வதே முக்கியம் என்றார்.
விழுமியங்கள், சமுதாய வழக்கங்கள், திருமணம் தொடர்பிலும் பெற்றோர் ஆவது தொடர்பிலும் மக்களுக்கு உள்ள எண்ணம் ஆகியவற்றைப் பொறுத்து பிறப்பு விகிதம் அமைந்துள்ளது. இவை குறுகிய காலகட்டத்தில் மாறாது என்று சுட்டினார் அமைச்சர்.
சென்ற ஆண்டு குறைவான எண்ணிக்கையில் தம்பதிகள் மணம் முடித்துக்கொண்டனர். அத்துடன் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டின் பிறப்பு விகிதம் சரிந்தது.
வீடமைப்புத் திட்டங்களை மெருகேற்றுவது, பாலர் பள்ளி இடங்களையும் தரத்தையும் அதிகரிப்பது, சமூக, வேலையிட ஆதரவை மேம்படுத்துவது போன்ற பல திட்டங்கள் மூலம் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற அரசாங்கம் இளம் சிங்கப்பூரர்களை ஊக்குவித்து வருகிறது.
ஆனால் சிங்கப்பூரில் இத்தகைய திட்டங்களை நடப்புக்குக் கொண்டு வருவது மட்டும் போதாது என்றும் குடும்ப வாழ்க்கையை மேலும் ஊக்குவிக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்கித் தரவேண்டும் என்றும் அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.

