வடக்கு-தெற்கு எம்ஆர்டி பாதையில் புதுப்பிப்பு, பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களின் சேவை நேரம் பாதிக்கப்படும். இதன்படி அவற்றின் சேவை தாமதமாகத் தொடங்குவதுடன் வழக்கத்தை விட சீக்கிரமாகவே முடிவுறும்.
இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 28ஆம் தேதிவரை இந்த மாற்றம் நீடிக்கும் என்று 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் நேற்று தெரிவித்தது. இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் முதல் தேதிவரை, புக்கிட் பாத்தோக்கிற்கும் மார்சிலிங்கிற்கும் இடைப்பட்ட ஆறு ரயில் நிலையங்கள் வார இறுதி நாட்களில் காலை எட்டு மணிக்குச் சேவையைத் தொடங்கும். அடுத்த மாதம் 6ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை புக்கிட் பாத்தோக்கிற்கும் யூ டீக்கும் இடைப்பட்ட நான்கு ரயில் நிலையங்கள் இரவு 11 மணிக்கு மூடப்படும். குறிப்பிட்ட வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இது செயல்படுத்தப்படும். கிடைக்கும் இந்த நேரத்தில் புதுப்பிப்புப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நிறுவனம் கூறியது. பாதிக்கப்பட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே பேருந்துச் சேவை ஏற்பாடு செய்யப்படும் என்றும் அது தெரிவித்தது.

