நெருக்குதலுக்கு உள்ளான நிலையில் தன் முதலாளியையும் அவருடைய கணவரையும் கத்தியால் குத்தியதன் தொடர்பில் போலிசாரிடம் வாக்குமூலம் தந்ததாக தெலுக் குராவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தோனீசிய பணிப்பெண் தன் மீதுள்ள கொலைச் குற்றச்சாட்டை எதிர்த்து வழக்காடுகிறார்.
2016ஆம் ஆண்டில் ஜூன் 7ஆம் தேதியன்று இரு மாதங்கள் பணிப்பெண்ணாக டர்யாட்டி வேலை செய்தபின் 59 வயதான திருவாட்டி சியாவ் கிம் சூவை கிட்டத்தட்ட 100 தடவை கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டது. இது பல நாட்கள் திட்டமிட்டு செய்யப்பட்டது என்பது அவரின் நாட்குறிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் பூட்டப்பட்டிருந்த கழிவறையில் இருந்த திருவாட்டி சியாவ்வை மீட்கக் கதவை உடைத்துச் சென்ற அவருடைய கணவரான திரு ஓங் தியாம் சூனையும் கத்தியால் குத்தியதாக டர்யாட்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தன் குடும்பத்தாரையும் ஹாங்காங்கில் உள்ள தன் காதலரையும் காணாத ஏக்கத்தில் டர்யாட்டி இக்குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் கூறியிருந்தார்.
போலிசாரிடம் வாக்குமூலம் தந்த சமயத்தில் டர்யாட்டிக்கு மயக்கமாக இருந்ததாக தற்காப்பு வழக்கறிஞர் திரு முஸமில் குற்றச்சாட்டுக்கு எதிர்வாதம் வைத்தார்.
தன் உள்ளங்கைகளில் வெட்டுக் காயங்கள் இருந்ததால் வலியில் இருப்பதாகவும் கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தன் தலையை இடித்துக்கொண்டதாகவும் மருத்துவ வண்டியில் இருந்தபோது டர்யாட்டி கூறினார் என சாட்சிகள் மூலம் திரு முஸமில் தன் வாதத்தை முன்வைத்தார். இதன்படி மருத்துவ ரீதியாக அவர் வாக்குமூலம் அளிப்பதற்குத் தகுதியற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் மருத்துவமனையில் வாக்குமூலத்தைப் பெற்றபோது, டர்யாட்டி நிதானமான நிலையில் வாக்குமூலம் தர ஒத்துழைத்ததாக வாக்குமூலம் பெற்ற திரு மகாதீர் கூறினார். விசாரணை தொடர்கிறது.

