காணாமல் போன சிங்கப்பூர் படகோட்டிகளின் படகு கரை ஒதுங்கியது

காணாமல் போன சிங்கப்பூர் படகோட்டிகளின் படகு கரை ஒதுங்கியது

2 mins read

மலேசியக் கடற்பகுதியில் காணாமல் போன இரு சிங்கப்பூரர்களின் பச்சை நிற கயாக் படகு கரை ஒதுங்கியிருப்பதாக மலேசிய போலிசார் தெரிவித்துள்ளனர்.

கரை ஒதுங்கிய அந்தப் படகை மீனவர் ஒருவர் கண்டதாகவும் அதுகுறித்து உடனடியாக போலிசாருக்குத் தகவல் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் படகை ஓட்டிய 62 வயது திரு டான் எங் சூன், 57 வயது திருவாட்டி புவா ஜியோக் டின் ஆகியோர் என்ன ஆனார்கள் என்று இன்னும் தெரியவில்லை.

காணாமல் போன இருவரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று 13 கயாக் படகோட்டிகளுடன் ஜோகூர் மாநிலத்தின் கடலோர நகரமான மெர்சிங்கிலிருந்து கயாக் படகில் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் ஓட்டிய கயாக் படகு மெர்சிங்கிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பாஹாங் மாநிலத் தலைநகர் குவந்தானின் கடலோரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

அந்தப் படகில் திரு டானின் பை, கைபேசி, பேஷன் அட்டை ஆகியவை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகைக் கண்டுபிடித்த மீனவர் அந்தக் கைபேசியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் திரு டானின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து, காணாமல் போன படகோட்டிகளைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வரும் மலேசிய கடற்துறை அமலாக்கப் பிரிவிடம் திரு டானின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

திரு டானின் குடும்பத்தாரை கைபேசி மூலம் அழைத்த மீனவரை அதிகாரிகள் தொடர்புகொண்டனர். அந்த மீனவர் தேடுதல், மீட்பு முயற்சியில் அதிகாரிகளுக்கு உதவுவதாக நம்பப்படுகிறது.

பாஹாங்கின் புலாவ் தியோமான் தீவுக்கு அருகில் 900 சதுர கடல் மைல் அளவுக்கு தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.

தேடுதல் பணிகளில் கூடுதல் விமானங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினர்.

மெர்சிங்கிற்கு அருகில் உள்ள என்டாவ் கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று காரணமாக திரு டானும் திருவாட்டி புவாவும் ஓட்டிச் சென்ற கயாக் படகு மற்ற படகுகளிடமிருந்து பிரிந்துச் சென்றதாக அறியப்படுகிறது.வர்த்தகரான திருவாட்டி புவாவும் ஓய்வுபெற்ற வழக்கறிஞரான திரு டானும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள். அவர்கள் கடலில் கயாக் படகு ஓட்டும் அனுபவம் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.