மின்னியல் வருகையர் அட்டை சோதனைக்காலம் நீட்டிப்பு: அதிகமான வருகையாளர்கள் இணையம்வழி சமர்ப்பிக்கலாம்

மின்னியல் வருகையர் அட்டை சோதனைக்காலம் நீட்டிப்பு: அதிகமான வருகையாளர்கள் இணையம்வழி சமர்ப்பிக்கலாம்

2 mins read
8422b041-9e18-4c9f-afff-eada51e0a297
-

சிங்கப்பூருக்கு வரும் இன்னும் அதிகமான வருகையாளர்கள், சிங்கப்பூரை வந்தடைவதற்கு முந்திய 14 நாட்கள் வரை மின்னியல் வருகையர் அட்டையை இணையம்வழி அல்லது கைபேசி வழி சமர்ப்பிக்கலாம். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் முன்னோட்டச் சோதனையின் ஒரு பகுதியாக இது சாத்தியமாகிறது.

இந்த வருகையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழையும்போது தங்களது கடப்பிதழ்களை மட்டும் காட்டினால் போதும். ஏனெனில், அவர்களது மின்னியல் வருகையர் அட்டையிலுள்ள விவரங்கள் முன்கூட்டியே சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என ஆணையம் தெரிவித்தது.

ஏர்ஏஷியா, ஜெட்ஸ்டார் ஏஷியா, கத்தே பசிஃபிக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய விமானச் சேவைகளிலும், டிரான்ஸ்டார் ட்ராவல் பேருந்து சேவையிலும், பாத்தாம்ஃபாஸ்ட் ஃபெர்ரீஸ், பிந்தான் ரிசோர்ட் ஃபெர்ரீஸ், ஹொராய்சன் ஃபாஸ்ட் ஃபெர்ரி, மஜெஸ்டிக் ஃபாஸ்ட் ஃபெர்ரி பயணப்படகு சேவைகளிலும் சிங்கப்பூருக்கு வருகையளிக்கும் பயணிகள் முன்னோட்டச் சோதனையில் இடம்பெறுகிறார்கள்.

மற்ற வருகையாளர்கள் அனைவரும் காகிதத்தில் அச்சிடப்பட்ட அட்டைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும்.

உல்லாசக் கப்பல்களில், ரயில்களில், கார்களில், மோட்டார்சைக்கிள்களில், லாரிகளில் வருவோரும், வேலை அனுமதியுடன் வருவோரும் இந்த வருகையாளர்களில் உள்ளடங்குவர்.

கைபேசி செயலியைப் பயன்படுத்துவோர் தங்களது கடப்பிதழை ஒளிவருடல் செய்து, தாமாக விவரங்களை நிரப்புவதைத் தவிர்த்திடலாம்.

ஒருமுறை சமர்ப்பித்த விவரங்களை அடுத்தடுத்த சிங்கப்பூர் பயணங்களுக்கும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காகிதமில்லாத குடிநுழைவு முறையை அமலாக்குவதற்காகவே மின்னியல் வருகையர் அட்டை சோதிக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.

எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்குள் காகித அட்டைகளுக்குப் பதிலாக மின்னியல் அட்டைகள் முழுமையாக நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.