அமைச்சர் சான்: மின்னிலக்கப் பொருளியலில் செழித்தோங்க நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

அமைச்சர் சான்: மின்னிலக்கப் பொருளியலில் செழித்தோங்க நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

1 mins read
22cc0f80-b91e-47c1-9ea0-0cb8e25812a5
'ஐபிஎம் திங்க் சிங்கப்பூர் 2019' மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு தொடக்க உரை நிகழ்த்திய வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அதிவேக மின்னிலக்கப் பொருளியலில் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் திகழ, நிறுவனங்களும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அவற்றின் வளங்களைப் பகிர்ந்து, செயல்முறைகளை மற்றவர்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

ஒன்றுசேர்ந்து பணியாற்றாவிடில், உலகம் முழுவதும் உள்ள நாடுகளும் தொழில் நிறுவனங்களும் "ஏழ்மையுடன் இருக்கும்" என்று தமது அக்கறையை அவர் வெளிப்படுத்தினார்.

"உலகம் இன்று பெரிய அளவிலான சவாலை எதிர்கொள்கிறது. மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைப்பதில் நம்பிக்கை இல்லாத நாடுகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன. உலகம் சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து காணப்பட்டால், நாம் அனைவரும் ஏழ்மையைச் சந்திப்பும்," என்று அவர் கூறினார்.

உலகம் தனித்தனிப் பிரிவுகளாக காணப்பட்டால், ஐபிஎம், கூகல், பே பால் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மின்னிலக்கப் பொருளியலில் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர் சொன்னார்.

'ஐபிஎம் திங்க் சிங்கப்பூர் 2019' மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு தொடக்க உரை நிகழ்த்திய திரு சான் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

உலகளாவிய மின்னிலக்கப் பொருளியலின் மதிப்பு 11.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$15.9 டிரில்லியன்) என ஆக்ஸ்ஃபர்ட் இகானாமிக்ஸ் மற்றும் ஹுவாவெய் நிறுவனங்கள் 2016ஆம் ஆண்டு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. உலகளாவிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 15 விழுக்காட்டிற்கு மேல் அங்கம் வகிக்கிறது.