பாதுகாப்புத் தரமில்லா மின்ஸ்கூட்டர்கள்; கடைக்காரருக்கு அபராதம்

பாதுகாப்பு தரநிலைகளைக் கொண்டிராத மூன்று மின்ஸ்கூட்டர்களைக் காட்சிக்கு வைத்ததற்காக விளையாட்டுப் பொருள்கள் விற்கும் ‘நிங்’ என்ற கடைக்கு நேற்று $750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தனிநபர் நடமாட்டச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற முதல் கடை இது.

கடந்த ஜூலை 9ஆம் தேதி ஓரியன் அட் பயா லேபர் பில்டிங்கில் உள்ள அந்தக் கடையில் அமலாக்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஐந்து தனிநபர் நடமாட்ட சாதனங்களில் மூன்று ‘யுஎல்2272’ சான்றிதழ் பெற்றிருக்கவில்லை என்று நிலப்போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி இங் ஜுன் காய் தெரிவித்தார்.

“பாதுகாப்பு தரநிலைகளைக் கொண்டிராத சாதனங்களை விற்பனைக்கு வைப்பதன் மூலம் நிங் கடை சட்டத்தை மீறுவதுடன் அவற்றை வாங்கிப் பொது இடங்களில் பயன்படுத்தவும் சந்தையில் அவற்றை விநியோகிக்கவும் பயனீட்டாளர்களை ஈர்க்கிறது,” என்று திரு இங் கூறினார்.

அமெரிக்க சான்றிதழ் வழங்கும் சுயேட்சை நிறுவனம் இந்த ‘யுஎல்2272’ தரநிலைகளை  உருவாக்கியுள்ளது.

இந்தச் சான்றிதழைப் பெற சாதனத்தின் பேட்டரி அமைப்பு, மின்னியல் அம்சங்கள், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றின் தரநிலைகளைப் பெற்றிருக்க வேண்டும்.