‘ஸ்பைஸ்’ நச்சுணவால் மரணம்; நேரம் கடத்தியது காரணம்

பிரபல ‘ஸ்பைஸ்’ உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை ஆடவர் சாப்பிட்டு இறந்த சம்பவம் தொடர்பில், உணவை நேரங்கழித்துச் சாப்பிட்டதால் மரணம் நேர்ந்திருக்கக் கூடும் என்று நேற்று மரண விசாரணை நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

சென்ற ஆண்டு நவம்பர் 6ஆம் தேதியன்று ஒரு நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டத்திற்காக ‘ஸ்பைஸ்’ உணவகம் அதன் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தது. நண்பகல் 11.33 மணியளவில் விநியோகிக்கப்பட்ட உணவு ஒரு மணி நேரத்திற்குள் உட்கொள்ளப்பட வேண்டும் என்ற குறிப்பும் பொட்டலங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட திரு முகம்மது ஃபட்லி, உணவு விநியோகிக்கப்பட்டு மூன்று மணி நேரத்திற்குப் பின்னரே உணவைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. 

நச்சுணவு பாதிப்பால் திரு ஃபட்லி இறந்ததற்கு இந்தத் தாமதம் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சை சேர்ந்த திரு பிரேம் ராஜ் சின்னசாமி நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 

இதற்கிடையே உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் உண்டோர் சிலரும் நச்சுணவு பாதிப்புக்குள்ளானதும் குறிப்பிடப்பட்டது. இம்மாதம் 23ஆம் தேதியன்று மரண விசாரணை அதிகாரி தன் கண்டுபிடிப்புகளை வெளியிடுவார்.